ஃபூ ஐ சான் மடாலயம்

0
755

சிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஃபூ ஐ சான் மடாலயம் (Foo Hai Ch’an Monastery). கெய்லாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலை ஒட்டி இந்த புத்த ஆலயம் தற்போது அமைந்துள்ளது. 1935-ஆம் ஆண்டு தாய்வானில் பிறந்து வளர்ந்த ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஹோங் ஜாங் என்பவரால் இந்த மடாலயம் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் புத்தமதத்தை பரப்பும் நோக்கில் இந்த மடாலயம் இங்கு தோற்றுவிக்கப்பட்டது. ஹோங் ஜாங்கின் மறைவுக்குப் பிறகு 1975-ஆம் ஆண்டு முதல் இதனை மியோ ஷோ பராமரித்து வருகிறார்.

புத்த துறவிகளின் தியான நிலையான ஜென் தத்துவ வடிவில் இந்த மடாலயத்தின் கட்டிடக் கலை அமையப்பெற்றுள்ளது. மேலும், இங்கு, போதி மரம், புத்தரி புனித எச்சங்கள் போன்ற புத்த மத அடையாளங்கள் பலவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கலாம். இந்த மடாலயத்தில் ஹெங் மற்றும் ஹா எனும் இரு தர்மபாலர்கள் வாயிலைக் காத்த வண்ணம் பிரம்மாண்டமாக வீற்றுள்ளனர். இந்து மதத்திலும் துவார பாலகர்கள் கோயிலைக் காப்பது என்பது ஐதீகம். இந்தியாவிலிருந்து உதித்த புத்த மதத்திலும் இந்த நம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

பிரதான மடாலயத்தை சுற்றி இரு கோபுரங்கள் உள்ளன. அவை முறையே மணி மற்றும் மேள கோபுரங்கள். வட திசையில் மணி கோபுரமும் தென் திசையில் மேள கோபுரமும் உள்ளன. தினமும் காலையில் கோயில் மணி 108 முறை அதிக சத்தத்தில் தொடங்கி இறங்கு வரிசையில் அமைதி நிலை வரை அடிக்கப்படும். இரவு முடிந்து நற்பொழுது விடிந்ததை இது உணர்த்துகிறது. பின்னர் மாலை பொழுதில் அமைதி நிலையில் தொடங்கி அதிக சத்தத்துடன் இன்றைய தினம் நிறைவுற்றது என்பதை விளக்கும் வண்ணம் 108 முறை இங்கு மணி ஒலிக்கப்படுகின்றது.

பிரதான மடாலயம் 4 அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தர் குவானின் எனப்படுகிறார். அதாவது ஆயிரம் கரங்களை உடையவர் என்று பொருள். இந்து மதத்தில் காளியம்மன் எவ்வாறு தோற்றம் கொண்டு இருப்பாளோ அவ்வாறுடைய தோற்றத்தில் அரிதாக இங்கு புத்தர் காட்சியளிக்கின்றார். சுமார் 9.9மீட்டர்(32.5 அடி) உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலை ஆலயத்தினுள் உள்ளது. இதனைக் காணவே இங்கு வெளி நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.     மடாலய வளாகத்தின் வலது புறத்தில் நான்கு அடுக்குமாடி கொண்ட கல்வி நிலையம் உள்ளது. அங்கு நூலகம் மற்றும் தங்கும் விடுதிகளும் உள்ளன.

இங்குள்ள போதி மரம் இலங்கையில் பழங்காலமாக உள்ள ஜெய ஸ்ரீ மகா போதி மரத்தில் இருந்து வெட்டப்பட்டு சிங்கப்பூர் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது இத கூடுதல் சிறப்பு. மேலும், இந்த மடாலயத்தில் இறந்தவர்களின் அஸ்தியும் கரைக்கப்படுகிறது.

Address: 87 Geylang East Ave 2, Singapore 389753.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here