கனவுகளை நினைவாக்கிய கலாம் சொற்பொழிவு தினம்!

0
432

வந்தார்-வென்றார்-சென்றார்!

பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் இன்றைய மாலைப் பேச்சு, அத்தனையும் விஞ்ஞானி-மனிதாபிமானி-மாணவர்களின் கனவு நாதன் அப்துல் கலாம் அவர்களைப் பற்றியது. மதம் கடந்த, இனம் கடந்த,மக்கள் மனம் நிறைந்த அமரர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்வியலை,தடம் புரளாத கொள்கைப் பாதையை, மக்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்தையே முன்னிறுத்திய அவரது ஆத்ம சுத்தத்தை ஆங்கிலத்திற்கே உரிய அழகு நடையில் செதுக்கிக் காட்டினார் முனைவர் ஜெயந்தஸ்ரீ. இடையிடையே மின்னி மறைந்த தமிழ் சொற்கள், (அந்தக் கால) காவிரியாற்றின் சலசலப்பில் எம்பிக் குதிக்கும் வெள்ளி மீன்களாகத் துள்ளி விழுந்தன.

இந்தியர் சங்க ஆதாரவில் அப்துல் கலாம் விஷன் நடத்திய இம் முதல் சொற்பொழிவுத் திருவிழாவை முன்னின்று நடத்தியவர் முன்னாள் ஜோர்டானிய சிங்கப்பூர் தூதரும், இந்நாள் இந்தியர் சங்கத் தலைவருமான திரு. கேசவபாணி அவர்கள். திருவாளர்கள் கேசவபாணி, கலாமோகன், மா.அன்பழகன், ஏ.பி.ராமன், அருமை சந்திரன், ஜான் ராமமூர்த்தி, ஜோதி மாணிக்கம் உள்ளிட்ட தற்காலிக செயலவை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இன்றைய ;அப்துல் கலாம் சொற்பொழிவு’ நிகழ்ச்சி’ சிறப்போடு அரங்கேறியது. கலாம் ஆர்வலர்கள் முழு மூச்சுடன் பணியாற்றி ஒத்துழைத்தனர்.

எந்தையாய் வாழ்ந்த எங்கள் கலாமே
சிந்தையுள் கலந்த பின் சென்றது எங்கே?
மக்கள் அதிபர் மனிதருள் மாணிக்கம்
திக்கெட்டும் போற்றிடும் திருமுகம் எங்கே?……

குரலும், இசையும் இணைந்த பாடகர் பரசு கல்யாணின் துவக்க கீதம், புதுமைத்தேனீ மா.அன்பழகனின் கவிதா அர்ப்பணம்!

திரு.கேசவபாணி, பேராசிரியர் வினிதா சின்ஹா, சிறப்புப் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ,பாராட்டுரை வழங்கிய வழக்குரைஞர் கலாமோகன், நெறியாளர் வீர விஜயபாரதி அனைவரும் பங்கேற்ற இந் நிகழ்வு சரியாக இரவு 8 மணிக்கு நிறைவு கண்டது. –ஏபிஆர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here