‘புனித மர’ பாலசுப்பிரமணியர் கோவில்

0
504

1962-ஆம் ஆண்டு திரு.பி. கருப்பையா என்பவரின் கனவில் பொங்கல் பண்டிகை தினத்தன்று முருகன் ஒரு தங்க நிற இராஜ நாகத்துடன் இலந்தை மரத்தடியின் கீழ் காட்சி அளித்துள்ளார். அந்த இடம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த நேவல் பேஸ் குடியிருப்பு பகுதியின் அருகாமையில் அமைந்திருந்த புற்களும், புதர்களும் நிறைந்த இடம். கனவில் கண்ட இடத்தையும், மரத்தையும் நேரில் கண்ட அவருக்கு முருகனின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அந்த மரத்துக்கு அடியில் முருகனின் ஆயுதம் மற்றும் அடையாளமான ஒரு பெரிய வேல் ஒன்றை வைத்து பூஜை செய்ய துவங்கினார் அப்படி உருவானது தான் சிங்கப்பூரின் ஈசூன்(Yisun) தொழிற்பூங்காவில் அமைந்துள்ள புனித மர பாலசுப்பிரமணியர் கோவில்.

பொதுவாக தமிழகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு தல விருட்சம் என்பது இருக்கும். ஆனால், சிங்கப்பூரில் நகர மேம்பாடு திட்டம் என்ற பெயரில் அவ்வப்போது கோயில்கள் இடம் மாற்றப்படுவது வழக்கம் என்பதால், ஒரே தல விருட்சம் உள்ள கோயில்கள் என்பது மிகவும் அரிது. ஆனால், உருவானது முதல் இன்று வரை எந்த ஒரு இடமாற்றமும் நிகழாமல் தல விருட்சத்துடன் உள்ள சிறப்பு இந்த பாலசுப்பிரமணிய முருகன் கோயிலுக்கு தான் உண்டு. 1964-ஆம் ஆண்டு முதல் கோவில் சிறிது சிறிதாக பெரும் வளர்ச்சியை பல ஆண்டு கால இடைவெளியில் மற்ற கோயில்களை போலவே வளர்ச்சியைக் கண்டது. கோயிலின் முக்கிய விழாக்களாக பங்குனி உத்திர திருவிழா, இந்த ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவர்களும், வைணவர்களும் இந்த பங்குனி உத்திர திருவிழாவை கொண்டாடி வருவது பல தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

முதன் முதலாக 1965-ஆம் ஆண்டு முதல் இங்கு பங்குனி விழா ஆரம்பிக்கப்பட்டது. சிவசாமி பண்டாரம் 6 இளையர்களுடன் காவடி தூக்கி பங்குனி உத்திர விழாவைத் துவக்கி வைத்தார். இன்று பல்லாயிரக் காவடிகளும், பால்குடங்குளும் முருகனின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. பங்குனி உத்திரத் திருவிழா தொடர்புடன் திரு தேர் பவனியும் முருகன் அழகிய அலங்காரத்துடன் வீதி உலா வரும் நிகழ்வும் இந்த கோயிலின் தனிச்சிறப்பு. மயில் வாகனனான பாலசுப்பிரமணிய சுவாமியை வேண்டி விரதம் இருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இக்கோயிலின் ஐதீகம்.

Address: 10, Yishun Industrial Park A. Singapore 786772.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here