பேராசிரியர் அ.மாக்ஸ் – ஜூலை மாத வாசகர் வட்டச் சந்திப்பு

0
345

எம்.கே.குமார்

“ஜெயமோகனைப் பிடிக்காதவர்; திட்டுபவர்’ என்று சொல்லியிருந்தால் இன்னும் கூட்டம் வந்திருக்குமோ” என்று கேட்டார் நண்பரொருவர். பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்கள் தன் மனைவியுடன் கலந்துகொண்டுச் சிறப்பித்த வாசகர் வட்டத்தின் ஜூலை 4 அன்று நடந்த கலந்துரையாடலுக்கு கடைசிநேரத்தில் சொல்லியும்கூட பதினைந்து-இருபதுபேர் வந்திருந்தார்கள்.
அரசியலோ சமூகமோ பண்பாடோ வரலாறோ அனைத்திலும் ஓர் எழுத்தாளனின் பங்கு என்பதென்ன என்பது குறித்துபேசத்துவங்கினார் திரு. அ.மார்க்ஸ். மனிதநேயம் எவ்வாறு ஒரு எழுத்தாளனின் விகசிப்பாய் இருக்கமுடியும் என்று ஜார்ஜ் ஓர்வெலின் ‘ஒரு தூக்கு’ பதிவை முன்வைத்து விவரித்து ஜெயகாந்தன் வரை நீட்டித்தார்.
பசுவதைச்சட்டம், காந்திகொலை, முசோலினியைச்சந்தித்த மூஞ்ஙே, அதுகுறித்த தன் கட்டுரைக்கு அரவிந்தன் நீலகண்டனின் பதில், இந்தியாவிற்கு வெளியே ‘தொலைவில் தொடரும் தேசிய உணர்வு’, அதனுள்ளே பரவும் சாதி, மத வேறுபாடுகள், ட்ரம்ப், இஸ்ரேல் சென்றுள்ள மோடி மற்றும் உலகளாவிய ஃபாசிஸம் குறித்தும் ‘பாலிடிக்ஸ் எப்படி யுனிடிக்ஸ்’ என்று மாறிவருகிறது என்றும் சொன்னார்.
வெளிநாட்டில் தன் வேரைத்தேடும் சமூகத்துக்குள், முதலில் ‘தமிழன்’ என்று தொடங்கி பின்பு அவற்றுக்குள்ளே வளரும் சாதிய, மத வேறுபாடுகளின் ஆபத்தைக்குறிப்பிட்டார்.
பாபர்மசூதியில் சிலையை வைத்தபொழுது நேரு என்ன சொன்னார், காந்தியும் நேருவும் எப்படி இன்றளவும் இந்தியா போன்ற பல்வேறுபிரிவுகளைக்கொண்ட ஆன்மாவை உணர்ந்தவர்களாயிருந்தார்கள் என்றும் பேசினார்.


பாரதியின் மட்டுமல்ல, எந்த படைப்பையும் அல்லது படைப்பிலக்கிய வரிகளையும் சூழ்நிலைக்கேற்றவாறு எவ்வாறு மாற்றிக்கொள்ளமுடியும், அதை மேற்கோள்காட்டுபவரின் உள்நோக்கம் என்ன என்பதை அறியவேண்டிய அவசியம் குறித்தும் சொன்னார்.
தன்னுடைய களப்பணியின்போது ஏற்பட்ட சில சுவையான சம்பவங்களையும் சொன்னார். வன்னியர்கள் தன் காலை வெட்டிவிட்டதாக தலித்திய இளைஞர் ஒருவர் நடனமாடியதை நம்பி உண்மையறியப்புறப்பட்டு அது பொய் என்று தெரிந்தபிறகு அதை வெளிப்படையாய் அறிவித்ததையும் பகிர்ந்துகொண்டார்.
அ.மார்க்ஸ் அவர்களும் ஜெயமோகன் அவர்களும் இணைந்து நின்ற ஓரிடம் காந்தி. ‘எனது வாழ்வு எனது செய்தி’ என்றுச்சொல்லிச்சென்ற காந்தியை நினைத்துக்கொள்கிறேன். வேலைநாளின் ஓர் பொழுதை இனிய மாலையாக்கிய வாசகர் வட்டத்துக்கும் திரு அ.மார்க்ஸ் அவர்களுக்கும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here