லாப்ரடோர் இயற்கை பூங்கா

0
519

சிங்கப்பூரின் தெற்கு பகுதியான மெயின்லேண்ட் பகுதியில் உள்ளது இந்த லாப்ரடோர் இயற்கை பூங்கா. இங்கு பாறைகளும், கடல்களும், குன்றுகளுமே இயற்கையின் எழில் கொஞ்சும் அழகினை தாங்கி சுற்றுலா பயணிகளுக்கு ரம்மியமான இயற்கை சூழலை நல்கி வருகிறது. 1951-ஆம் ஆண்டு இந்த லாப்ரடோர் பூங்கா பொதுமக்கள் வந்து செல்லும் சுற்றுலாதலமாக மாறியது. இரண்டாம் உலகப் போரின் சோக எச்சங்களை தன்னகத்தே கொண்டு அமைதியாக காட்சியளிக்கின்றது இந்த பூங்கா. இந்த பூங்கா மற்றும் இதன் அருகில் உள்ள மொத்த இடமும் பசிர் பன்ஜங் கடற்கரையாக அழைக்கப்படுகிறது. மலாய் மொழியில் இதனை நீண்ட கடற்கரை என்று அழைக்கின்றனர். இதன் அருகாமையில் பசிர் பன்ஜங் கோட்டை ஒன்றும் உள்ளது. லாப்ரடோர் இயற்கை பூங்காவில் 70க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகள் உள்ளன. நீலமூக்கு கிளி, ரூபஸ் மரங்கொத்தி பறவை மற்றும் அபாட் பேப்லர் போன்ற அரிதான பறவைகளை சுற்றுலா பயணிகள் இங்கு கண்டு ரசிக்கலாம். மேலும், இங்கு 11 வகையிலான விதவிதமான பட்டாம்பூச்சிகளும் காணக்கிடைக்கின்றன. இதன் அருகில் உள்ள கடற்கரை பகுதிகளில் பவளப்பாறைகள் மற்றும் நண்டுகள் உள்ளன மேலும் 102 வகையான கடற்பாசிகளும் இங்கு தென்படுகின்றன. இயற்கையின் எழிலை நாடும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் சொர்க்கம் என்றே சொல்லலாம்.

பார்வை நேரம்: 24 மணி நேரம்

Address: Labrador Villa Road, Singapore 119187

வட்டப்பாதை இரயில் தடத்தில் அமைந்துள்ள லாப்ரடார் பார்க் இரயில் நிலையத்தில் இருந்து, 1 கிமி நடக்கும் தொலைவில் இவ்விடம் உள்ளது. மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here