ஸ்ரீதண்டாயுதபாணி கோயில்

0
624

சிங்கப்பூரின் டாங்க் சாலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீதண்டாயுதபாணி முருகன் கோயில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயிலாக உள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு. தமிழ் வளர்த்த முருகனுக்கு தமிழகத்தில் பழநி, திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, சுவாமி மலை, திருப்பரங்குன்றம் என அறுபடை வீடுகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வக்குடி தமிழ் மக்களால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் அதிக அளவில் இந்து கோயில்களும், குறிப்பாக முருகன் கோயில்களும் நிர்மானிக்கப்பட்டு தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது. சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி முருகன் கோயில், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளைச் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் முயற்சியில் 1859-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒக்ஸ்லி எனும் மருத்துவரின் நிலத்தை வாங்கி இந்த கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர் முருகப் பெருமான். 1859ல் கோயில் கட்டப்பட்ட பின்னர் அதன் முதல் குடமுழுக்கு விழா ஏப்ரல் 4-ஆம் தேதி 1859-ஆம் ஆண்டு வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. பொதுமக்கள் திரளாக திரண்டு வந்து முருகப் பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர். அதன் பின்னர், பிப்ரவரி 2, 1936-ஆம் ஆண்டும், ஜூலை 7, 1955-ஆம் ஆண்டும் முறையே இக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். கோயில் கருவறையின் நுழைவுவாயிலில் ஜம்பு விநாயாகர் இடது புறமாகவும், இடும்பர் வலப்புறமாகவும் அமர்ந்திருக்கின்றனர். இங்குள்ள மூலவர் வேல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் இந்த வேலுக்கே அபிஷேகம், அலங்காரம் எல்லாம் வேலுக்கே செய்யப்பட்டு பூஜிக்கப்படுகின்றது. மேலும், கோயிலைச் சுற்றி சிவன், அம்பிகை, நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், அண்ணாமலையார், பிரம்மா, துர்கை மற்றும் நவக்கிரங்களின் விக்கிரகங்கள் மற்றும் தனிக் கோயில் அமைப்புகள் உள்ளன. ஸ்ரீதண்டாயுதபாணி கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால், இக்கோயிலில் சிவாச்சாரியார்கள் தான் பூசைகள் செய்கின்றனர். இக்கோயிலின் தனித்துவ சிறப்பம்சங்கள் என்றால், மண்டபத்தூண்களில் முருகனின் அறுபடை வீடுகள் ஆறு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் விமானத்தைச் சுற்றி 48 கண்ணாடி மாடங்களில் தெய்வச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் அழகுற பொறிக்கப்பட்டுள்ளது. ஆனந்தத் தாண்டவ நடராஜரும், மாணிக்கவாசகரும் சிவகாமி அம்மையும் கதை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர். கோயிலின் தல வரலாறு இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. இக்கோயிலின் முக்கிய விழாக்கள் என்றால் அது தைப்பூசம், நவராத்திரி, கந்தசஷ்டி மற்றும் லட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் தான். இந்த நாட்களின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீதண்டாயுத பாணி கோயிலில் கூடி பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்துவர். பால்காவடி, புஷ்ப காவடி, வேல்காவடி, மயில்காவடி போன்ற காவடிகளையும் பக்தர்கள் சுமந்து திருமுருகனை வழிபட்டு அறுமுகனின் ஆசியைப் பெறுவர்.

Address: 15 Tank Rd, Singapore 238065

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here