ஆசிய அருங்காட்சியகம்

0
392

சிங்கப்பூரின் முதன்மை அருங்காட்சியகமாக விளங்குகிறது ஆசிய அருங்காட்சியகம். சிங்கப்பூரின் முக்கியமான நான்கு அருங்காட்சியகங்களும் உருவாவதற்கு காரணமும் இதுதான். இதன் கிளைகளாகவே பிரபலமான பெரனகன் அருங்காட்சியகம், தேசிய அருங்காட்சியகம் மற்றும் சிங்கப்பூர் கலை அருங்காட்சியகம் செயல்பட்டு வருகின்றன. 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் முதன் முதலாக பழைய தாவோ நான் பள்ளியில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இங்கு பெரும்பாலும், சீன நாகரிக வளர்ச்சிகள் பற்றிய காட்சிப் பொருள்கள் மற்றும் வரலாறுகள் இடம்பெற்றன.

பின்னர் ஆசியாவின் அனைத்து பகுதிகளின் வரலாற்றுக் கலைக் களஞ்சியமாக உருமாறி வந்த சூழலில் இந்த அருங்காட்சியகம் எம்பிரஸ் (Empress Place Building) கட்டிடத்திற்கு மாறி தற்போது வரை அங்கேயே பார்வையாளர்களின் அறிவுத் திறன்களையும், ஆசியா பற்றிய தேடல்களை பூர்த்தி செய்யும் கல்விக் களஞ்சியமாக திகழ்கிறது. முன்னர் இந்த அருங்காட்சியகம் இருந்த இடத்தில் தான் தற்போது பெரனகன் அருங்காட்சியகம் இடம்பெற்றுள்ளது. 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி அருங்காட்சியகத்தின் குறியீடு (logo) மற்றும் “The Asian Civilisations Museum – Where Asian Cultures Come Alive!” எனும் ஸ்லோகன் உருவானது.

இங்கு 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போதிசத்வா காந்தாரா அரசனின் தலை சிலையாக வடிவமைக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், சீனர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் இந்தியாவில் உள்ள தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்களின் வெண்கல சிற்பங்களும், சிவன், பார்வதி சிலைகளும், கனிஷ்கர் காலத்தின் மாதுர புத்தாவின் அரிய மணல் கல் போன்ற பல அரிய பண்டைய புராதன பொக்கிஷங்கள் இங்கு பாதுகாத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆசிய அருங்காட்சியகத்தில் உள்ள பெரிய அரங்குகளில் மிகப்பெரிய சொற்பொழிவுகளும், ஆய்வுகள் குறித்த ஆலோசனை மன்றங்களும் அவ்வப்போது நடைபெறும். மேலும், அருங்காட்சியகத்தின் உட்புறத்தில் அமைந்துள்ள எம்பிரஸ் உணவகத்தில் சீன வகை உணவுகள் விற்கப்படுகின்றன. இங்குள்ள கடைகளில் ஆசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளில் புகழ்பெற்று விளங்கும் புத்தகங்கள் விற்கப்படுகின்றன.

பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை

Address: 1 Empress Place, Singapore 179555.

வடகிழக்கு தளத்தில் கிளார்க் குவே இரயில் நிலையத்தில் இருந்து 961 பேருந்தை எடுத்து அடுத்த நிறுத்தமான நீதிமன்ற வளாகத்தில் இறங்கி 350 மீட்டர் நடக்கும் தூரத்தில் இங்கு சென்று சேரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here