’ஔவையார் விழா‘ – பாண்டித்துரையின் பண்ணிசை

0
501

புகைப்படம் : நன்றி தியாக. இரமேஷ்

மலேசியாவின் அற்புதக் கலைஞர் சி.பாண்டித்துரை அவர்களின் நவரச நாடகங்களை நம் கண் முன் நிறுத்தியது, தமிழ்மொழி பண்பட்டுக் கழகத்தின் இன்றைய ‘ஔவையார் விழா’. அலுப்புச் சலிப்பில்லா அவரின் 2 மணி நேர படைப்பில் இசை சஞ்சாரம் சுருதி சுத்தமாக வலம் வந்து இன்பம் தந்தது. கூர்மையும் நுட்பமும் மிகுந்த அவரின் மொழிக் கொஞ்சல் நம்மைக் குளிர வைத்தது. கருத்தாழம் மிக்க பேச்சில் ஆழமான நகைச்சுவையும் நெளிந்து விளையாடியதைக் கண்டோம். நெஞ்சைத் தொடும் வியாக்கியானங்களை நீக்குப் போக்குடன் விமர்சித்து ரசிக மனங்களில் நிழலாடச் செய்தது நம்மை வியக்க வைத்தது. மொத்தத்தில் மேடைக் கலையின் மொத்த உருவமாக ஜனித்துக் காட்டும் பாண்டித்துறையாரின் ஆற்றல் அன்றாடம் அல்ல அவ்வப்போது புத்துயிர் பெற்று விளங்குவதைக் கண்டு பெருமைப்படுகிறோம்.

கழகத்தின் தலைவர் திரு.அரிகிருஷ்ணனின் தெளிவான வரவேற்புரையில் தமிழை வளர்ப்பது நம் கையில் இல்லை, பெற்றொர்கள் வாழ்வு முறையில் மாற்றம் காண்பித்தால் தான், பிள்ளைகள் அதைப் பின்பற்றுவார்கள் எனக் குறிப்பிட்டார். நமக்கு தமிழ் நாட்டுப் பாசம் இந்த அளவு தேவையா? எதையும் புரிந்து ஆதரவு அளியுங்கள். நம் எதிர்காலம் நம் கையில் தான் உள்ளது….அரி அவர்களின் பேச்சு அத்தனை தெளிவு.

நியமன நாடாளு மன்ற உறுப்பினர் குமாரி.கே.தனலட்சுமி, ஆங்கிலத்தில் பேசினாலும் அழகாாகப் பேசினார். இளையர் முன்னேற்றத்திற்கு ஔவை தேவை .. அவர் அருளிய அத்தனை பாடல்களும் அவசியம் தேவை என்றார். இளையர்களை ஔவை வழி நடத்த முற்படுவோம் என வேண்டினார். பாலர் வகுப்புச் சிறர்களிலிருந்து உயர்நிலை வரை ஆடச் செய்து, பாடச் செய்து, கதைகள் கூறச் செய்து, பாடல்களை மனப்பாடம் செய்வித்து, பல கோணங்களில் ஔவையின் பாடல்களை சின்னஞ் சிறு உள்ளங்களில் ஏற்றி, மேடையில் இறக்கிய விதம்….வியக்க வைக்கிறது.இதற்காக உழைத்த ஆர்வமுள்ள பெற்றோர்களைப் புகழ்வதா, ஏற்பாட்டாளர்களின் அரும் பணியைப் பாராட்டுவதா, மனம் லயித்து ஈடுபட்ட குழந்தைச் செல்வங்களைப் பாராட்டுவதா?

300க்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்பு, 62 பேருக்கு மதிப்பான பரிசுகள்!

ராகவ் ஹரிஹரசுதன் சொன்ன கதை அத்தனை சுகம்! வித்யாஸ்ரீ, கிரிஸ்லி இருவரும் அரங்கேற்றிய கதைக் காட்சியில் எத்தனை சரளம்! உணர்வு பூர்வமாக, உச்சரிப்பு குறையாமல், மக்கள் வெள்ளத்திற்கு எதிராக நின்று கதை சொன்ன குழந்தைகள், நம் நம்பிக்கைக்குரிய எதிர் காலங்கள். சமூக மன்றச் சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்ட திருமதி. கௌசல்யா ராமச்சந்திரனுக்கு ஔவை விருது மிகப் பொருத்தம். மலேசியச் சொந்தம் பாண்டித்துரை, மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சிங்கப்பூரில் முதல் இரங்கல் குரலை எழுப்பித் தன் நிகழ்ச்சியைத் துவக்கியதைப் பாராட்டுகிறேன். ‘வாழ்க்கை எனும் ஓடம்’ பாடலை கே.பி.எஸ் குரலில் பாடி அரங்கின் உணர்வுகளை ஒன்று திரட்டியவர் பாடகி ஜெயஸ்ரீ குமார். சென்ற வாரம் கலைஞர் மறைவுச் செய்தி வெளியானதும் , அந் நாட்டு வானொலியில் கலைஞருக்கு முதன் முதலாக இரங்கல் தெரிவித்தவரும் பாண்டிதுரை ஆவார்.

பண்ணிசையில் ஔவயாரை பாண்டித்துரை பாந்தவ்யத்துடன் கட்டி அழைத்து வந்த பாதை இசை மயமானது. கண்ணதாசனை லாவகமாக இடையே இடையே நடை போட வைத்தது இலக்கிய மயமானது. தன் சொல்லாழம் மிக்க உரையாடலில் நம் சிந்தனைக்குச் சுருதி சேர்த்தது சுகமானது.

‘இல்லாதது ஒன்றுமில்லை’ என்ற ராகமாலிகைப் பாடலுடன் துவக்கி, ’சிந்துமதிமிசையின்’ ராகப் பெருங் கடலில் கலந்து , 2 மணி நேரம் இசை ஜாலம் செய்த இசைக் குழுவினரை எப்படியும் பாராட்டலாம். அவர்களின் சட்டாம்பிள்ளையாக இருந்து, அரங்கு முழுவதும் ஆட்டம் போட்டு நம் அனைவரையும் அடக்கி ஆண்ட பாண்டித்துரைக்கு நாம் கடைமைப்பட்டிருக்கிறோம். அவர் கூறிய சிறு சிறு துணுக்குகள், பெரும் பெரும் உணர்வு அலைகளை எழுப்பின. சாவுக்கு இலக்கணம், மூட நம்பிக்கைகளின் விளைவு, பெண்ணின் பெருமை, தாயின் தவம், கூடாத நட்பு, வாழ்வியலின் மீதான யதார்த்தமான பார்வை, நாய்க் கதை, குயவன் கதை இன்னும் என்னென்னவோ, அத்தனையும் நெஞ்சை ஆரத் தழுவிய பாராட்டு-வாழ்த்து! –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here