நேர்மாறு – அஷ்வினி செல்வராஜ்

0
737

நள்ளிரவு மணி 12:05

குறும்படமாக எடுக்கப்பட்ட இச்சிறுகதை வாசகர் வட்ட குறும்படப் போட்டியில் ஆறுதல் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது.

அந்த அரங்கமே ஆரவாரத்தின் அரவத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. கொண்டாட்டக் களிப்பில் அனைவருமே தங்களை மறந்த வண்ணம் ஆடிப் பாடி மகிழ்ந்துகொண்டிருந்த வேளையில் வானவேடிக்கைகள் வானில் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்தன. எங்கு நோக்கினும் ஒளியும் ஒலியும் நீக்கமற நிறைந்திருந்தன.

இக்காட்சிகளனைத்தையும் இருண்டதோர் வரவேற்பறையில் தன்னுடைய குடும்பத்தாருடன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் ரேவதி.

“என்ன ரேவதி? எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கே?” இது ரேவதியுடைய அண்ணன் சுரேஷ்.

“நான் கஷ்டப்பட்டு தீபாவளிக்கு ரங்கோலி செஞ்சு, அதை போட்டோ எடுத்து இன்ஸ்டால அப்லோட் பண்ணா, ஒரு ஐம்பது லைக்காவது கிடைக்கவேண்டாம்? முப்பதுலேயே நிக்குது,” என்று, கைத்தொலைப்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டே, குனிந்த தலை நிமிராமல் பதிலளித்தாள் ரேவதி.

“இங்க மட்டும் என்ன வாழுதாம்? வாட்ஸ்ஆப்ல எல்லாருக்கும் மெனக்கெட்டு தீபாவளி நல்வாழ்த்துக்கள்னு அனுப்பினா, ஒருத்தனாவது ரிபளை பன்னுரானானு பாரேன்! ரெண்டு புளு டிக்‌ஸ் கூட தெரியுது…” என்று எரிச்சலுடன் கடிந்துகொண்டான் அவன்.

இதற்கிடையே, ‘Don’t Worry, Be Happy!’ என்ற நகைச்சுவையான வரியை இவர்களின் குடும்ப வாட்ஸ்ஆப் குரூப்பில் சமயம் பார்த்து தட்டிவிட்டார் இவர்களுடைய தந்தை திரு ராஜேஷ். அதைப் படித்துவிட்டு அந்த ஒரு வினாடி இரு பிள்ளைகளுமே தங்களுடைய தந்தையைப் பார்த்து சிரித்தார்கள். அவ்வளவுதான். சில நொடிகளில், மறுபடியும் பழைய குருடி கதவ திறடி என்று தத்தம் தனி உலகங்களில் தஞ்சமடைந்தனர்.

தொழில்நுட்பம் எனும் தொற்றுநோய் பெற்றவரையும் தொற்றிக்கொள்ளும்போது அதற்கு பிள்ளைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

காலை மணி 8:00

‘காலையில நல்லா தலைக்கு குளிச்சிட்டு எட்டு மணிக்கெல்லாம் கோவிலுக்கு கிளம்பவேண்டியது. அப்பாவும் பிள்ளைகளும் சேர்ந்துகிட்டு இஷ்டத்துக்கு இழுத்தடிச்சா எப்பதான் போறதோ…’ என்று திருமதி பார்வதி புலம்பியவாரே கிரைன்டரைத் தட்டிவிட்டார். அதுவும் அவருடன் சேர்ந்து புலம்ப ஆரம்பித்தது.

‘அம்மா, காலையிலேயே ஆரம்பிச்சுடீங்களா உங்க சுப்பரபாதத்தே? கோவிலுக்கு போய்ட்டு வந்து நல்லா வெளியிலே சாப்பிட்டு தூங்க தானே போறோம்? அதுக்கா இவ்வளவு அவசரம்?’ என்று அலட்டிக்கொண்டாள் ரேவதி.

‘சாயங்காலம் உங்கப்பாவோட பிரண்டு வீட்டுக்கு போறோம் ரேவதி, மறந்துறாதே,’ என்று கூறிமுடித்தார் அவளது தாயார்.

அம்மாவின் சுப்பரபாதத்தாலோ, தங்கையின் எதிர்வாதத்தாலோ, ஏன் கிரைன்டரின் கொடூர சத்தத்தாலோ கூட எழாத சுரேஷ், தன் கைத்தொலைப்பேசி சற்று சிணுங்கியதும் சட்டென விழித்துக்கொண்டான். தன்னுடைய அந்தரங்கங்களை பாதுகாப்பதில் அவ்வளவு அக்கறை அண்ணனுக்கு. அதனால் தான் கைத்தொலைப்பேசியைத் தலையணையின் அருகே வைத்துக்கொண்டு தினமும் உறங்குகிறாரோ என்னவோ?

அரை தூக்கத்திலேயே தன்னுடைய மெத்தையை பிராண்டியவன் ‘தொப்’ என்ற சத்தம் கேட்டவுடன் அவசர அவசரமாக எழுந்து கட்டிலில் அமர்ந்தான். ‘போடுவியா? போடுவியா?’ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு கீழே விழுந்த கைத்தொலைப்பேசியை எடுத்தான். அதில் ஒலித்தது அலாரம் அல்ல, தோழியின் அழைப்பு.

‘தீபாவளி நல்வாழ்த்துக்கள் டா!’ உற்சாகத்துடன் ஒரு குரல் ஒலித்தது.

‘என்னமா நீங்க காலங்காத்தாலேயே இப்படி பன்றீங்களேமா’ என்று தூக்கம் கலைந்த துக்கத்துடன் பதிலளித்தான் சுரேஷ்.

‘காலங்காத்தாலேயேவா? மணி எட்டாச்சு பரதர், தெரியும்லே? இன்னிக்கு தீபாவளி! கோவிலுக்கு போகலே?’ என்று நகைத்தாள் கல்பனா.

‘என்னை பிரதர்னு கூப்பிடாதேனு எத்தனை தடவ சொல்றது? சரி அதை விடு, கோவிலுக்கா? நாங்க லேட்டா லேட்டஸ்டா ஒரு பத்து மணி போல தான் போவோம்.’

‘பத்து மணிக்கா? உங்க சொந்தகாரங்க வீட்டுக்கு எல்லாம் இன்னிக்கு நீ போக மாட்டியா?’

‘இல்லை கல்பனா, முன்னாடி பாட்டி உயிரோட இருந்தப்போ ஒவ்வொரு தீபாவளியும் மறக்காம எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டு அவங்க வீட்டுக்கு போவோம். அவங்க இறந்த பிறகு யாரும் கண்டுகருதில்லை. தீபாவளி நல்வாழ்த்துகள் அப்படின்னு யாரும் போன் அடிச்சு கூட சொல்ரதில்லை. அவங்க அவங்க பேஸ்புக்ல அவங்க தீபாவளிக்கு என்ன வாங்கினாங்க, எங்கங்க போனாங்க, அப்படினு போடுறதை பாக்கத்தான் முடியுது.’

‘கவலைப்படாதே டா, அதான் நான் இருக்கேனே? போன் அடிச்சு உன்னோட தூக்கத்தைக் கலைக்க!’

‘உன் குரல் என்னோட தூக்கத்தை மட்டுமா கலைக்குது?’

ஐந்து நிமிடங்களுக்கு நீடித்தது அந்த உரையாடல். கிரைன்டரின் புலம்பலோடு பிரசர் குக்கரின் அலறலும் சேர்ந்துகொண்டால் காது வெடித்துவிடும் அல்லவா? மளமளவென்று கோவிலுக்கு கிளம்பலானான் சுரேஷ்.

மதியம் மணி 2:00

‘அண்ணா? அண்ணா!’

தொண்டைக்கிழிய கத்திய ரேவதிக்கு மௌளம் தான் பதிலாகக் கிட்டியது.

‘நான் இங்க ஒருத்தி கஷ்டப்பட்டு மத்தாப்பு எங்க இருக்குனு தேடிக்கிட்டு இருக்கேன். ரொம்ப முக்கியமா ஐயா அஜீத் படம் பாத்துட்டு இருக்காரு,’ என்று தனக்குள்ளேயே முனுமுனுத்துக்கொண்டாள் ரேவதி. அவரவர் பிரச்சினை அவரவருக்கு!

அடுத்த முறை அவள் வாயைத் திறந்தாள் கூட சேர்ந்து அம்மாவின் திருவாயும் திறந்துவிடும் என்பதை நன்குணர்ந்திருந்தான் சுரேஷ். அதனால் தானே முந்திக்கொண்டு, ‘இரு இரு வரேன்’ என்று சொல்லிக்கொண்டு தொலைக்காட்சி பெட்டியின் மீது கண்கள் பதிந்தபடியே பொருட்கள் சேமித்து வைக்கப் பயன்படும் அறையை நோக்கி நடந்தான்.

‘இப்போ நீ எதுக்கு மத்தாப்பைத் தேடிகிட்டு இருக்க? நம்ம வீட்டுக்குத் தான் யாரும் சொந்தகாரங்க வரலேயே! நீ யார் கூட விளையாட போற? பேசாம வா, என் கூட உட்கார்ந்து படம் பாரு!’

‘இல்லை அண்ணா, ரொம்ப நாளா விளையாடலாயா, அதனால தான் ஆசையா இருக்கு. தயவுசெஞ்சு கொஞ்சம் தேடிப் பாரேன், இங்கதான் இருக்கும்…’

முடியாது என்று சொன்னால் தங்கை விடப்போவதுமில்லை. ரேவதியுடன் சேர்ந்து அவனும் தேடினான். பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல மத்தாப்புடன் அவர்களுடைய சிறு பிராயத்து புகைப்படம் ஒன்றும் கிடைத்தது.

அதில் ரேவதியும் சுரேஷும் தங்களுடைய உறவினர்களுக்காக தீபாவளி வாழ்த்து அட்டைகளை எழுதிக்கொண்டிருந்தபடி புகைப்படக் கருவியைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

‘கடந்த சில வருஷமாவே யாரும் தீபாவளி வாழ்த்து அட்டையெல்லாம் பயன்படுத்துறதேயில்லை, இல்லை ரேவதி?’

‘நான் பயன்படுத்துறேனே!’

‘அப்படியா?’

‘யாருக்கும் அனுப்பறதில்லை. புடிச்ச நடிகரோட படத்தை ரூம்ல ஒட்டிவைச்சிக்க தீபாவளி அட்டையை விட வேற என்ன நல்ல காரணம் இருக்க முடியும்?’

புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷின் கண்கள் ரேவதியை மெதுவாக ஏறெடுத்துப் பார்த்தன. அண்ணனின் மூளை சிறிதளவாவது தங்கைக்கு இருக்கிறது என்று எண்ணினானோ என்னவோ, அவனையறியாமலேயே சிரித்துவிட்டான்.

மாலை மணி 7:00

‘அய்யயோ! போனை வீட்டிலேயே மறந்து வச்சுட்டேன்,’ என்று பதறினாள் ரேவதி.

‘அதை லிப்ட்ல வந்து சொல்லு. சீக்கிரம் போய் எடுத்துட்டுவா, நாங்க காடியை எடுத்துக்குட்டு கீழே காத்திருக்கோம்,’ என்றார் அவளது தந்தை.

அரை மணி நேரத்தில் திரு ராஜேஷின் நண்பரின் வீட்டை அடைந்தனர் நால்வரும்.

‘வாங்க வாங்க, பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! அடடே, ரேவதியும் சுரேஷும் தோளுக்கு மேலே வளர்ந்துட்டாங்களே! எப்படியிருக்கீங்க எல்லாரும்?’ என்று திரு ராஜேஷின் நண்பர் திரு ராஜா அவர்களை வரவேற்றதுதான். வீட்டு வாசலில் தொடங்கிய பேச்சு ஒரு மணி நேரத்திற்கு ஓய்ந்தபாடில்லை.

‘ரேவதி, சுரேஷ், எப்படியிருக்கீங்க ரெண்டு பேரும்?’ என்று திரு ராஜா வினவவே, கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டிருந்த இருவரும் திருதிருவென விழிக்கத் தொடங்கினர். அவர்களும் அங்கு இருக்கிறார்கள் என்ற நிதர்சனத்தையே ஒரு மணி நேரம் கழித்துதான் திரு ராஜா புரிந்துகொண்டார் போலும்.

‘நல்லா இருக்கோம் அங்கிள்,’ என்று இருவருமே ஒன்றாக ராகம் பாடினார்கள்.

 

‘இவங்க தான் என் பசங்க ரெண்டு பேரும், சின்ன வயசுல கூட சேர்ந்து மத்தாப்பு விளையாடி இருக்கீங்களே மறந்தாச்சா?’ என்று அவருடைய மகன்களை சுட்டிக்காட்டியபடியே என்றோ நடந்தவற்றை நினைவுகூற முயற்சித்துக்கொண்டிருந்தார் அவர்; ஒரு மூட்டை அரிசியில் கற்களைத் தேடுவதுபோல.

அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங்கையின் மனதில் எழுந்த கேள்வி அவளுடைய முகத்தில் பெரியக் கேள்விக்குறியாகத் தென்பட்டதோ என்னவோ, அண்ணன் அதைப் புரிந்துகொண்டு ‘எனக்கென்ன தெரியும்?’ என்று தலையசைத்தான்.

அவ்விருவருக்குமே திரு ராஜாவின் பிள்ளைகளோடு பேச வேண்டும் என்ற ஆசை அடிமனதில் இருந்தது. இருப்பினும் எதைப்பற்றி பேசுவது, எவ்வாறு பேசுவது, எங்கு தொடங்குவது என்று ஆயிரமாயிரம் கேள்விகள் இருவரின் மனதையும் குடைந்தன.

 

‘நீ போய் பேசு ரேவதி…’

‘நீ தானே பெரியவன் நீ பேசினால் என்ன?’

‘உனக்கே தைரியம் இல்லை எனக்கு மட்டும் இருக்குமா?’

‘பெயருக்குத் தான் அண்ணன் ஒன்னுக்கும் லாயக் இல்லை…’

இப்படி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டே அங்கிருந்த நேரத்தை மொத்தமாக கழித்துவிட்டனர். ‘இருந்த ஒரு ஆசையையும் கெடுத்துவிட்டான் பாவி…’ என்று வாகனத்தில் ஏறியபடி ரேவதி கைத்தொலைப்பேசியை நோட்டமிட்டாள். முகபுத்தகத்தில் ஒரு புது பிரெண்ட் ரிகுவெஸ்ட் கிடைத்திருந்தது. கூடவே அந்த நபரிடமிருந்து ‘ஹை!’ என்ற முகபுத்தக மெஸெஜும் வந்திருந்தது.

அதை யார் அனுப்பினார் என்ற பார்த்த ரேவதிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை – சிறிது நேரத்திற்கு முன்னால் யாரிடம் பேசவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தாளோ, அந்த முகங்களில் ஒன்றல்லவா அது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here