எழுந்திருங்க!!! – சியாம்குமார்

0
269

“எழுந்திருங்க!! 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருக்கனும்னு சொன்னீங்க, இப்ப மணி 7” என்று ஏழரையைக் கூட்டிய மனைவியின் குரலுக்குப் பதறிப் பணிவுடன் எழுந்தான் இளங்கோ. அந்த அரைத்தூக்கத்தில் திறன்பேசியைத் தேட எத்தனித்தான். சில பொருட்கள் விழுந்த சத்தம் கேட்டு, “திறன்பேசி கையில் இருந்தால்தான் காலைக்கடன் கழிக்க முடியுமா?” சமையலறையிலிருந்து வந்த கேள்விக்கு, பதிலாய் அப்படியே ஓடினான். காக்கைக் குளியலுடன், கடனாய்க் கடமைகளை முடித்து 8.15-க்கு ‘கிளிமெண்டி’ இரயில்நிலையம் நோக்கி விரைந்தான்.

காலைநேரக் கூட்டத்தில் இருக்கை கிடைத்தால் அதிசயம், அவனுக்கு அதிர்ஷ்டம் ஒரு பெண்மணி எழுந்திரிக்க சட்டெனப் போய் அமர்ந்தான். சுற்றும்முற்றும் பார்த்தான், ஒரு குழந்தை அம்மாவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தது, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்து கொண்டிருந்தது. அது தூக்கத்தின் இன்ப எல்லை. முதியோருக்கான ஒரு இருக்கையில் இளம்பெண் கண்மூடி, காதில் ஒலிவாங்கி வைத்து அமர்ந்திருந்தாள். பெரும்பாலும் இந்நிலையில் இருப்பவர்கள் தாம் இறங்குமிடம் வரும்போது விழித்துக்கொண்டு இறங்குவார்கள். அவள் தூங்கவில்லை, வரும் முதியோரைக் கவனித்து எழுந்து இடம் கொடுக்க மனமின்றி கண் மூடியிருக்கவுமில்லை, பாடலின் ‘லயத்தில்’ அவ்வாறு அமர்ந்திருக்கிறாள் என்று நேர்மறை எண்ணத்தில் பொருள் கொள்ள முனைந்தான் இளங்கோ.

அவ்வாறு மற்றவர்களைப் பார்த்துக் கொண்டே வரும்போது இளங்கோவுக்கு, அருகில் அமர்ந்திருந்தவர் தன் மீது சட்டெனச் சாய்வதுபோல் தோன்றியது,. ஆனால் “பைசாநகர கோபுரமாய்” அந்த சாய்ந்த நிலையிலேயே சற்றுநேரம் இருந்து மீண்டும் நேர்நிலைக்குச் சென்றார். அடுத்தடுத்து அவரின் “தஞ்சாவூர் பொம்மை” “சாமியாட்டம்” தொடர்ந்தது. “மன்னிக்கவும்” என்று நடுவே அவ்வப்போது குளறினார். தூக்கத்தின் முதல்நிலையில் அடியெடுத்து வைத்துள்ளார் என்று இளங்கோவுக்குப் புரிந்தது. அவன் நுழைந்தபொழுது எழுந்த பெண்மணி, நின்று கொண்டிருந்ததை அப்பொழுதுதான் கவனித்தான். அவளின் ‘நக்கல்’ பார்வையில், நின்ற காரணமும் இப்பொழுது புரிந்தது.

பிரயாணத்தின்போது அமர்ந்த சில நிமிடங்களில் தூங்கி விடுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால், அவர்கள் அருகில் அமர்த்திருப்பர்வர்கள் பாவம் செய்தேவர்களே என்றெண்ணித் தன்னை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொண்டான் இளங்கோ. இரயில் ‘ரெட்ஹில்’-லை அடைந்திருந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர் இப்பொழுது தூக்கத்தின் இரண்டாம் நிலைக்கு உயர்ந்திருந்தார், ஆமாம், அவர் ஆடுவது நின்றுவிட்டது, தன்னையறியாமல் உரிமையாய் இளங்கோவின் தோள்மீது சாய்ந்திருந்தார். தூக்கத்தின் மதிப்பு தெரிந்த இளங்கோ, ‘ராஃபிள்ஸ்-பிளேஸ்’ல் தான் இறங்கும்வரை பொறுமை காக்க முனைந்தான்.

ஒருவர் ‘தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தால்’, ‘கொட்டாவி விட்டால்’ அனிச்சையாய் எப்படி மற்றவருக்குத் தொற்றுமோ அதுபோல் தான் தூக்கமும். நம்மருகில் சிலர் தூங்கினால், நம்மையறியாமல் குறைந்தபட்சம் கண்ணை மட்டுமாவது மூடுவோம். ஆனால் இளங்கோ திறன்பேசியைப் பிறாண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது ‘வாட்சப்பில்’ தனது அமெரிக்க-நண்பர்கள் குழுவில் வந்த ‘இரவின்-மடியில் 30 பாடல்கள்’ பதிவை, காதில் ஒலிவாங்கி வைத்துக்கொண்டே, சொடுக்கினான். அருமையான பாட்டுகள் இளங்கோவின் காதில் ரீங்காரமிட ஆரம்பித்தன. வண்டி சுரங்கப்பாதைக்குள் சென்றது, அந்த மங்கிய வெளிச்சத்தில், மேலிருந்து வந்த குளிர்காற்று வருட, கவிஞர் கண்ணதாசன் எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த “தூக்கம் கண்களைத் தழுவட்டுமே….” பாடல் ஒலிக்க, இளங்கோவின் கண்கள் தன்னியறியாமல் மூடின.

சற்றுநேரத்தில் வண்டி ‘ராஃபிள்ஸ்-பிளேஸ்’-யைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது.
“எழுந்திருங்க!!!” என்று சொல்ல அங்கு அவன் மனைவி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here