வளைகுடா தோட்டம்(Gardens by the Bay)

0
454

Address: 18 Marina Gardens Dr, Singapore 018953

மத்திய சிங்கப்பூரில் உள்ள மரீனா நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த வளைகுடா தோட்டம். சுமார் 250 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட தோட்டம், சிங்கப்பூரில் சுற்றுலா வரும் பயணிகளின் பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் முதன்மையான ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டில் பிரதமர் லீ சியான் லூங்கின் உத்தரவு படி இதனை உருவாக்குவதற்கான சர்வதேச போட்டிகள் அரங்கேறின. மொத்தம் 24 நாடுகளைச் சேர்ந்த 70 நிறுவனங்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. இறுதியாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிரான்ட் அசோசியேட்ஸ் மற்றும் குஸ்தஃப்சான் போர்டர் நிறுவனங்களே இதன் கட்டுமான பொறுப்பை தட்டிச் சென்றன. வில்கின்சன் ஐயர், அடெலியர் டென் மற்றும் அடெலியர் ஒன் பொறியாளர்களால் இந்த பிரம்மாண்ட பூங்கா அழகோவியமாக உருவாகியது. 1.கிழக்கு வளைகுடா பூங்கா, 2. மத்திய வளைகுடா பூங்கா மற்றும் தெற்கு வளைகுடா பூங்காவாக இந்த தோட்டம் மூன்று பெரும் பிரிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் தெற்கு வளைகுடா பூங்காவில் 130 ஏக்கரில் பூக்களுக்கு என்றே பெரிய தோட்டப் பகுதி உள்ளது. அதில், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள மலர் வகைகள் பயிரிடப்ப்ட்டு வரும் சுற்றுலா பயணிகளின் மனதில் ரம்மியமான உணர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. இங்கு குழந்தைகளுக்கான பிரத்யேக கேளிக்கை பூங்காவும் உள்ளது. இந்த வளைகுடா தோட்டத்தை சுற்றிப்பார்க்க சிங்கப்பூர் மக்களுக்கு 20சி.டாலர்களும், வெளி நாட்டினருக்கு 28சி.டாலர்களும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.

மேக காடு (Cloud Forest):

சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் முக்கிய இடங்களில் மேக காடும் ஒன்று. இதன் வடிவமைப்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பிரம்மாண்ட கண்ணாடி மாளிகையில் ஒரு அழகிய காட்டையே உருவாக்கியுள்ளனர். இதன் கட்டிடக் கலை சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் என்றால், 100 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய உள்ளரங்கு நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை வெளியே வரும் எண்ணமே தோன்றாத வண்ணம் கட்டிப் போடும் மாயக் காடு இந்த மேகக் காடு. சிங்கப்பூர் மிகவும் சூடான நாடு என்பதால் மக்கள் இயற்கை சூழ்ந்த குளிர்ச்சிப் பகுதிகளை நாடி அதிகம் செல்வர். அவர்களை இந்த மேக காடு நிச்சயம் திருப்தி படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த காட்டினுள் பல அரிய வகை மரங்களும், வண்ணத்தை வாரி வழங்கும் ஹைப்ரிட் பூச்செடிகளும் பார்வையாளர்களுக்கு இரட்டிப்பு சந்தோசத்தை தந்து கொண்டு இருக்கின்றது. இதனுள் ருசியூட்டும் பல உணவகங்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளமும் கோடையை கொண்டாட சிறந்த இடமாக இதனை உருவாக்கியுள்ளது. குளிர்சாதன வசதிகளை கொண்ட இந்த மேகக் காடு, 3,000 – 9,000 அடி உள்ள மலைகளில் கிடைக்கும் தட்பவெப்ப நிலையை இங்கு கொண்டு வந்து சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் உறைய வைக்கின்றது.

கட்டண விபரம்:
பெரியவர்கள் -28 சி.டாலர்கள்
குழந்தைகள் – 15 சி.டாலர்கள்

வட்டப்பாதையையும் , டௌன்டவுன் தடத்தையும் இணைக்கும் பே பிராண்ட் இரயில் நிலத்திலிருந்து 1.4 கிமி நடக்கும்  தூரத்தில் இந்த பூந்தோட்டம் அமைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here