ஜனவரி மாதக் கதைக்களம் 2019

0
452

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஆதரவோடு ஒவ்வொரு மாதமும் கதைக்களத்தில் சிறுகதை, சிறுகதை விமர்சனப் போட்டிகளை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நடத்தி வருகிறது. இந்த 2019 ஆண்டின் முதல் கதைக்கள நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. கதைக்களத்தின் பொறுப்பாளர், சி.த.எ.க. துணைச் செயலாளர் திருமதி கிருத்திகா அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

பள்ளி மற்றும் பல்கலைகழக மாணவர் பிரிவில் வந்த ஒரு சிறுகதையை முறையே செல்வன் சரவணனும் திரு. உமாசங்கர் அவர்களும் வாசித்தனர். பொதுப்பிரிவில் வந்த பரிசுக்குரிய ஒரு சிறுகதையை திரு. ஷ்யாம்குமாரும், ஒரு கதை விமர்சனத்தை முனைவர் சக்தியா அவர்களும் வாசித்தனர். ‘சிங்கை எழுத்தாளர்கள்’ அங்கத்தை திருமதி மலையரசி வழிநடத்த, சிங்கையின் எழுத்தாளரும், சிங்கை மற்றும் மலேசியாவில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவரும், பெண்ணீயம் பற்றியும் சிங்கை மனம் கமழ எழுதும் எழுத்தாளருமான திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக(NTU) மாணவி குமாரி ரேவதி அவர்கள் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

முத்தாய்ப்பாய் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு செவிக்கு விருந்தளித்தனர். தனி நடையில் மாறுபட்ட படைப்புகளைக் கொடுக்கும் சிங்கை எழுத்தாளர் திரு. இந்திரஜித் அவர்கள் சிறுகதைகள் குறித்துச் செம்மையாய்ச் சிறப்புரை ஆற்றினார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் கலைமாமணி கவிஞர் திருமதி ஆண்டாள் பிரியதர்சினி (நிகழ்ச்சி நிர்வாகத் தலைவர், தூர்தர்ஷன் கேந்த்ரா புதுவை) அவர்கள் தாம் எழுதிய சிறுகதைத் தொகுப்பிலிருந்து சில சிறுகதைகளை மேற்கோள் காட்டிச் சிறுகதை எவ்வாறு சமூக மாற்றங்களைக் கொண்டு வர உதவும் என்றும் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.


திரு. நா. ஆண்டியப்பன் அவர்களின் தலைமை உரைக்குப் பின்னர், வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறுகதை வெற்றியாளர்கள்:

முதல் பரிசு: திருமதி மலையரசி – “ரெண்டு அம்பது வெள்ளி”
இரண்டாம் பரிசு: திருமதி மணிமாலா – “சகி”
மூன்றாம் பரிசு: திருமதி சங்கமித்ரா – “பசியின் வலி”

கதை விமர்சன வெற்றியாளர்கள்:
முதல் பரிசு: திரு. கீழை அ. கதிர்வேல் – “பிரேமா மகாலிங்கம் எழுதிய டாக்சி எண் 8884”
இரண்டாம் பரிசு: திருமதி பிரபாதேவி – “மணிமாலா எழுதிய எங்கே போகிறேன்? ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here