ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில்

0
652

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ ஆலயம் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீமன்மத காரூணீஸ்வரர் சிவன் கோயில் தோற்றம் கண்டது. காலாங்க் கேஸ் வொர்க்ஸ்(Kallang Gas Works) சிவன் கோயில் என பெரும்பாலான பக்தர்களால் அழைக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு. போக்குவரத்து அதிகம் உள்ள காலாங் சாலையிலும், சிங்கப்பூர் குடியேற்ற கட்டடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலும், அமைதியான, பசுமையான சுற்றுபுறம், ஆலயத்தின் பின்புறத்தில்  நெளிந்தாடும் அழகான காலாங் நதி என ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

இப்பகுதி வாழ் தமிழர்களுக்கு ஒரு வழிபாட்டு தலம் அமைத்துக் கொள்ள ஸ்ட்ரேட்ஸ் செட்டல்மென்ட்(Governor of Straits Settlement) கவர்னரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. 1951-ஆம் ஆண்டு கோவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1974-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.

ஆலயத்தில் நம்மை முதலில் வரவேற்பவர் சிவபெருமானின் ரிஷப வாகனமான நந்திகேஸ்வரர் தான். மூலவரான மன்மத காரூணீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஆலயத்தைச் சுற்றிலும், விக்னேஷ்வர வினாயகர், தண்டாயுதபாணி, பிரம்மா, சண்டிகேஷ்வரர், துர்கா என பல தெய்வங்கள் உள்ளனர். பார்வதி தேவியார் இங்கே பர்வதவர்த்தினியம்பாளாக காட்சியளிக்கிறார். மேலும், சிவபெருமானின் மறு உருவான தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்கள் சிவ தரிசனத்துடன் கூடிய சகல செளகரியங்களை இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அருளும் என்பது இக்கோயிலின் ஐதீகம். இக்கோயிலின் காவல் தெய்வமாக இருப்பவர் பைரவர். ஆலய நிறைவு பூஜையான அர்த்தமஜாம பூஜையை இவர் சன்னதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமளவில் வழிபடுகின்றனர்.

Address: 226 Kallang Road, Singapore 339096

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here