சான்றிதழ் : செல்வன் தருண்குமார்

0
430

அன்று தொடக்கக் கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வுக்கான மதிப்பெண்களின் வெளியீட்டு நாள் என்பதால் அனைத்து மாணவர்களும் ஒரு விதப் பயம் கலந்த எதிர்பார்ப்புடன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். எப்படியாவது நல்ல மதிப்பெண் பெற்று ரவி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன் ரவியின் தந்தை, அவனைப் பள்ளிக்கு அழைத்துச்சென்றார். ரவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் பெரும்பாலான நேரங்களில் அரசாங்கத்தின் உதவித் தொகையின் மூலமே பள்ளியில் பயின்று வந்தான். ரவியை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்று ஒரு தலைசிறந்த மருத்தவராக்கி பார்க்கவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அவருக்கு. இந்தத்
தொடக்கக் கல்லூரித் தேர்வில் ரவி நல்ல மதிப்பெண் பெறுவதற்காக அவனின் தந்தை அல்லும் பகலும் கடினமாக உழைத்து, அவனைத் துணைப்பாட வகுப்புகளில் சேர்த்துவிட்டார். அதனாலேயே அவருடைய உடல் நலம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியது.

ரவியின் தந்தை ஒரு விதப் பதற்றத்துடனேயே பள்ளி உணவகத்தில் அமர்ந்திருந்தார். அத்தருணத்தில் அவருடைய அலுவலகத்திலிருந்து அவரை உடனே வருமாறு குறுஞ்செய்தி வந்தவுடன், அவசரமாகப் பதற்றத்துடன் வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாகச் செல்ல முற்பட்டபொழுது கல்லூரியின் வாசலிலேயே விபத்தில் சிக்கினார். உடனே அங்கிருந்த ஆசிரியை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழி முழுவதுமே அவர் கண்களில் கண்ணீர் மல்க, ரவி பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார். தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுக் கல்லூரியிலேயே முதல் மாணவனாக ரவி தேர்ச்சி பெற்றிருந்தான். இந்த நற்செய்தியைத் தன் தந்தையிடம் சொல்வதற்காகக் காத்திருந்த ரவியிடம், அவர் விபத்தினால் மருத்துவமனையில் சேர்ந்திருப்பதைத் தன் ஆசிரியை மூலம் தெரிந்துகொண்டான். உடனே தனது நண்பன் குமாருடன் ரவி மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கு அவசரச் சிகிச்சை பிரிவில் தந்தை அனுமதிக்கப்பட்டுள்ளதைக் கண்டதும், துயரம் தாங்காமல் அழுதுகொண்டே இருந்தான். ஆசிரியர் குமாரிடம் ரவியின் தந்தையின் கைபேசியை அவனிடம் கொடுக்கச் சொல்லி அன்று மட்டும் ரவியை அவனது இல்லத்தில் தங்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ரவி அன்றிரவு முழுவதும் அவனது தந்தையின் குருதி படிந்த கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்குத் தன் தந்தையின் அன்பும், அரவணைப்பும் , அர்ப்பணிப்புடன் கலந்த கண்டிப்பும் அவன் கண்முன்னே வந்து சென்றது. மறுநாள், தனது மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு குமாருடன் மருத்துவமனைக்கு விரைந்தான். தனது தந்தை கண் விழித்துச் சான்றிதழைப் பார்த்து மிகவும் மகிழ்வார் என்ற நம்பிக்கையுடன் வந்தவனிடம் தாதியர் ஒருவர் சான்றிதழ் ஒன்றைக் கொடுத்தார். அந்த நேரத்தில், அவனுடைய அப்பா நேற்று திடீரென்று இறந்துவிட்டதாக ஆசிரியை சொன்னதைக் கேட்டதும், பயமாக இருக்கு ரவி எப்படித் தாங்கிக்கொள்வான் என்றான் குமார். தாதியர் கொடுத்தது தன் தந்தையின் இறப்புச் சான்றிதழ் என்பதைக் கண்டதும் பேரதிர்ச்சியில், ரவி ஒரு கையில் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண் சான்றிதழையும் மறு கையில் தன் தந்தையின் இறப்புச் சான்றிதழையும் வைத்துக்கொண்டு பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் கண்ணீர் மல்க நிராயுதபாணியாய் நின்றுகொண்டிருந்தான்.

சில நிமிட அமைதிக்குப்பின் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்! ஏனெனில் மாறனின்
குறும்படம் அனைவரது உள்ளத்தையும் உருகவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here