அந்நியர் : இந்துமதி

0
344

இந்துமதி :

இரவு நடைக்காக என் அறையை விட்டு வெளியேறினேன். வழக்கத்துக்கு மாறாக வெளியே கண் கூச வைக்கும் வெளிச்சம். வினோத குரல்கள் கேட்டன. பல ஒலிகளின் கலவையாக
இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நான் வேகமாக என் அறைக்குத் திரும்பினேன். கதவிடுக்கின் வழியாக நான் எட்டிப் பார்கையில் ஒரு ஆணும் பெண்ணும் தெரிந்தனர். என்னை அவர்கள் கண்டிடாதபடி உடலைக் கதவின் பின்னால் மறைத்துக் கொண்டேன். அவர்கள் சிறிது நேரத்தில் வெளியேறினர். வெளிச்சமும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று விட்டது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளியேறினேன்.

எனக்குப் பொதுவாக மனிதர்களையே பிடிப்பதில்லை. அதனால் தான் தனியனாக இந்த வீட்டில் ஒதுங்கி வாழ்ந்து வந்தேன். கூடப் பிறந்த சகோதர சகோதரிகள் எத்தனையோ
இருந்தும், ஆளுக்கொரு மூலையில். இப்போது தொடர்பிலில்லை. வளர்த்து விட்ட அம்மாவும் பிறகு அவள் வழியைப் பார்த்துக் கொண்டு போய்விட்டாள். அவர்கள் கூட அடிக்கடி ஒன்று
கூடுவதுண்டு. நான் மட்டும் இங்கு ஒன்டிக்கட்டையாய். இப்போது அதற்கும் பாதகமாய் அந்த இருவரும் என் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கிவிட்டார்கள்.

தனிக்காட்டு ராஜாவாய் வலம் வந்து கொண்டிருந்த எனக்கு இது பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. அவர்கள் நடமாட்டம் வெளியே ஓயும் வரை நான் என் இடத்தை விட்டு வெளியே வருவதே இல்லை. நாள் முழுக்க உள்ளுக்குள்ளேயே குட்டி போட்ட பூனையாய்ச் சுற்ற வேண்டியிருக்கிறது.

இரவிலும் என்னை அவர்கள் நிம்மதியாய் விடுவதில்லை. எந்த அசைவுகளுமற்ற, சப்தங்கள் ஓய்ந்த, ஊரே அடங்கி இருக்கும் இரவின் இருட்டுதான் எனக்கு மிகவும் பிடித்தமானது.
அனைவரும் கைவிட்ட அந்த இருட்டுக்குள் இரவெல்லாம் நீந்தி நீந்திக் களிப்பேன். ஆனால் அதற்கும் குந்தகம் விளைவிப்பது போல் விளக்குகளை எல்லாம் எரிய விட்டு இரவையும்
பகலாக்கி விடுகின்றனர்.

அவர்களின் வரவால் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல் உணவு. உணவுக்காக நான் வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் தினமும் வித விதமான உணவுகள் சமைத்தார்கள்.
அவர்கள் தென்படாத நேரங்களில் என் மீசையெல்லாம் வழிய, வயிறு புடைக்க உண்பேன். பின் அறைக்கு வந்து மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்து அங்கே வலை பின்னியிருக்கும்
சிலந்திக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லும்போது சொர்க்கமே கண்ணுக்குத் தெரியும். அன்று காலை குளியலறையில் இருந்த போது, திடீரென்று உள்ளே நுழைந்த அந்தப்
பெண்மணி சட்டெனக் கதவைச் சாத்திவிட்டார். எனக்குப் படபடப்பாகிவிட்டது. வேகமாக சென்று சுவரோரம் திரும்பி நின்றேன். சிறிது நேரத்தில் தண்ணீர் சிதறும் சத்தம். என் மேலும்
சில துளிகள் விழுந்தன. நான் மூச்சை அடக்கிக் கொண்டேன்.

‘பட்’டென்று கதவு திறக்கும் ஓசை கேட்க, நான் அவள் பக்கம் பார்க்காமல் குடுகுடுவென
வெளியே ஓடினேன்.

“காக்ரோச்……..”

அவள் கட்டிடம் அலறக் கத்தினாள். பெரிய வீரனைப் போல வந்த அவள் கணவன், என்னை
விளக்குமாறால் அடித்து அங்கிருந்த குப்பைத் தூம்புக்குள் விட்டெறிந்தான்.
நன்றி கெட்டவர்கள். என் வீட்டை எடுத்துக் கொண்டு என்னையே வீசி எரிந்துவிட்டர்கள்.
எனது காலை வேறு ஒடித்துவிட்டான். எப்படித்தான் இன்னொரு வீடு தேடப் போறேனோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here