செப்டம்பர் 2018 மாதக் கதைக்களம்

0
429

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஆதரவோடு ஒவ்வொரு மாதமும் கதைக்களத்தில் சிறுகதை, சிறுகதை விமர்சனப் போட்டிகளை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நடத்தி வருகிறது.

இந்த செப்டம்பர் மாதக் கதைக்களம் பல்வேறு சுவையான அங்கங்களால் களை கட்டியது என்றால் அது மிகையில்லை. கதைக்களத்தின் பொறுப்பாளர், சி.த.எ.க. துணைச் செயலாளர் திருமதி கிருத்திகா அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

”கதை சொல்லு!” புதிய அங்கத்தில், தொடக்கப்பள்ளி 3 மாணவி செல்வி அப்ரமேயா தான் எழுதிய கதையை ஏற்ற இறக்கங்களோடு, உணர்ச்சி பொங்கச் சொன்னது மிக அருமை. தொடர்ந்து, திருமதி பிரேமா மகாலிங்கம் வழிநடத்த, பரிசுக்குரிய ஒரு சிறுகதையையும், சிறுகதை விமர்சனத்தையும் முறையே திருமதி தமிழ்ச்செல்வி மற்றும் திரு. கீழை அ. கதிர்வேல் சிறப்பாக வாசித்தனர்.

இம்மாத சிறப்பு அங்கத்தில் “கதை விமர்சனம் செய்வது எப்படி?” என்ற தலைப்பில் திரு. சியாம்குமார் எழுத்தாளர்களுக்கு உபயோகமான குறிப்புகளை விளக்கக் காட்சியுடன் விவரித்த விதம் அருமை. ‘சிங்கை எழுத்தாளர்கள்’ அங்கத்தை திருமதி மலையரசி வழிநடத்த, கதைக்களம் ஆரம்பித்த காலம் முதல் அதன் பொறுப்பாளராக புதிய் எழுத்தாளர்கள் உருவாக ஊக்கமளித்து வந்த திரு. இராம வைரவன் அவர்களைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் திரு. அழகுசுந்தரம் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

முன்னாள் தயாரிப்பாளர், படைப்பாளர் ஆசிரியை திருமதி மீனாட்சி சபாபதி “கண்டதும், கேட்டதும் கதையாகும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆங்கிலம் கலக்காத தமிழில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற குறிப்புடன் அவருடைய உரை நிறைவடைந்தது. திரு. நா. ஆண்டியப்பன் அவர்களின் தலைமை உரைக்குப் பின்னர், வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறுகதை வெற்றியாளர்கள்:
முதல் பரிசு: திருமதி மலையரசி – “கல்யாண வயசுதான் வந்துடுச்சு…”
இரண்டாம் பரிசு: திரு சியாம்குமார் – “கண்டேன் காசியை”
மூன்றாம் பரிசு: திருமதி மணிமாலா – “ஓட்டம்”

கதை விமர்சன வெற்றியாளர்கள்:
முதல் பரிசு: திருமதி மணிமாலா – “தானா மேரா டைரி – இராம. கண்ணபிரான்”
இரண்டாம் பரிசு: திருமதி மலையரசி – “மாதா – சித்துராஜ் பொன்ராஜ்”

கதைக்களம் நிகழ்ச்சி விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here