கண்டேன் காசியை – சியாம்குமார் (செப்டம்பர் 2018)

0
250

“எப்படியாவது நல்லபடியா கல்யாணம் முடியனும்…” மேடையில் இருந்த கல்யாணப்
பையனின் அம்மா கல்யாணி, மனதில் வேண்டிக்கொண்டே மண்டபத்தில்
வந்திருப்பவர்களைப் பார்த்தாள். “என்னங்க!, ‘கம்பளைண்ட்’ காசி ‘அங்கிள்’…” அதிர்ச்சியுடன்
“இவர் எப்படி இங்க?” கேட்டாள் கல்யாணி. “பெண்வீட்டோட தூரத்துச் சொந்தமாம், என்ன
கலாட்டா நடக்குமோ? தெரியல!” அவள் கணவன் சொன்னார். அதிலிருந்து மீள்வதற்குள்
மற்றொரு காட்சி கண்டாள் கல்யாணி. அங்கே, கலங்கிய கண்களுடன் சௌந்தர்யா காசி
‘அங்கிள்’ பக்கத்தில் வந்தமர்வது தெரிந்தது. கல்யாணியின் இதயம் ‘ட்ரெட் மில்’-லில்
ஓடாமலேயே உச்ச நிலையில் துடித்தது. “காசி ‘அங்கிள்’, பாயசத்தில் உப்பில்லை என்று
சொல்லியே ஒரு கல்யாணத்தை நிறுத்தியவர், அவரிடம் இவள் எதாவது உளறினாலே போதும்,
கெட்டுவிடும்…”, மனப் பதட்டத்தோடு அவர்களைப் பார்த்தாள்.
****
“என்னம்மா, கண்கலங்கிற்கு?”, காசி ‘அங்கிள்’ யதார்த்தமாய் ஆரம்பித்தார், சௌந்தர்யாவிடம்.
“என்ன சொல்ல, இந்தப் பையனை எனக்கு நல்லாவே தெரியும்”, சௌந்தர்யா சொல்ல, இலவச
‘வை-பை’ கிடைத்ததுபோல், உற்சாகமாகி, “என்ன சொல்லற?, இந்தக் கல்யாணப் பையனோடு
பழகியிருக்கியா?” கேட்டார்
“ஆமாம், பலவருஷமா..” விசும்பினாள், சௌந்தர்யா.
“ஹ்ம்ம்…ஏதாவது சேர்ந்து எடுத்த ‘போட்டோ’, ‘லெட்டர்ஸ்’ அந்த மாதிரி…”, முழுவீச்சில்
இறங்கியிருந்தார்.
“ஒண்ணா-இரண்டா?, நாங்க சேர்ந்து எடுத்துக்கொண்ட ‘போட்டோஸ்’-களை வைத்து பல
‘ஆல்பம்’ போடலாம். நான் ‘காலேஜ்’ படிக்கும் போது அவ்வளவு லெட்டர்ஸ் எழுதிருக்கான்.
ஏன் வேலைக்குப் போன பின் எத்தனை ‘ஈமெயில்’ போட்டிருக்கான் தெரியுமா?” குமுறினாள்.
“எதாவது பரிசுப் பொருள் கொடுத்தோ வாங்கியதோ உண்டா? சேர்ந்து ஏதாவது ஊருக்குப்
போயிருக்கிறீங்களா?”, ஒரு காவல் அதிகாரியாகவே மாறிக்கொண்டிருந்தார், காசி ‘அங்கிள்’ .
“நான் மறந்தாக்கூட என்னோட பிறந்தநாளுக்குச் சரியாய் வாழ்த்தும் பரிசும்
கொடுப்பான்…நிறைய ஊருக்குப் போயிருக்கோம், 2-மாசம் முன்னாடி கூட வியட்நாம்
போய்ட்டு வந்தோம்”, கண்களைத் துடைத்துக்கொண்டே சௌந்தர்யா.

****
கல்யாணிக்கு மண மேடையில் இருக்க முடியவில்லை, சௌந்தர்யா மற்றும் காசி மாமா-வின்
முக பாவங்களைப் பார்த்து பிரச்சனை உருவாகப் போவதை உணர்ந்தாள்.
அருகிலிருந்த கணவர் “அவளை அங்கிருந்து கிளப்பு…” என்று கல்யாணியிடம் சொன்னார்.

****
“இதெல்லாம் அவனோட அம்மா-அப்பா வுக்குத் தெரியுமா?” சற்றே குரல் மாற்றிக் கேட்டார்,
காசி.
“அவங்களுக்கு நல்லாவே தெரியும், நான் அவனோட சின்ன-சண்டை போட்டதும் தெரியும்..
என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் திடீர்ன்னு போன மாசம் அப்பா-அம்மா பார்த்த
பொண்ணு பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி, ‘ஈமெயில்’
அனுப்பினான். என்னோட மனநிலையை யாரிடம் சொல்ல?”, மூக்கைச் சிந்திக்கொண்டே,
சௌந்தர்யா.
“நீ கல்யாணத்த நிறுத்த முயற்சி செய்யலையா?”, நேரடிக் கேள்விக்கு வந்தார்
“இல்ல…அவன் நல்லா இருந்தா அதுபோதும்…. இந்தப் பிரிவைத் தடுக்க முடியாது,
இருந்தாலும் ‘ஐ லவ் ஹிம் வெரி மச்'”, அழுந்த மூச்சை விட்டுக்கொண்டே, சௌந்தர்யா.
“நீ வேணா விடலாம், ஆனா இந்தக் காசி விடமாட்டான்” பொங்கியெழுந்தார்.
அப்போது “ஏய்..சௌந்தர்யா!, என்னபண்ற இங்க? மேடைக்குப் போ” என்று ஒரு பெண்
சொல்ல,
“தாலி-முடி போட்டுட்டு வந்து அப்புறமா என் தம்பியைப் பத்தி நிறைய சொல்றேன்” எழுந்தாள்
சொந்தர்யா.
‘வைஃபை’-யில்லா கைபேசியாய், காசி ‘அங்கிள்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here