வெயிலைக் குடிப்பவள் : மணிமாலா

0
404

‘வெயிலைக் குடிப்பவள்’ என்பதுதான் என் கணவர் எனக்கு வைத்திருக்கும் பெயர். பட்டப்பெயரைக்கொண்டு கூப்பிட்டால் யாராயிருந்தாலும் கோபம் தேடிக்கொண்டு வரும். ஆனால் இந்தத் தள்ளாத வயதிலும் நான் அதை ரசிக்கக் காரணம்? அதிலும் வெயில் இருக்குதே! சந்தனத்தைக் குழைத்துப் பூசியதைப்போல இனிமையைத் தருவதுடன், இயற்கையோட புலம்பல் இல்லாததும் வெயில்தானே!

இப்போது என்றில்லை, பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட நிதானமா நடந்து போய், மெதுவாதான் வீட்டுக்குத் திரும்புவேன். மழை வந்தால் சினேகிதிகள், விளையாட்டு என அனைத்தையும் விட்டுவிட்டு கம்பத்து வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்ததுகூட நான் வெயிலை நேசிப்பதற்குக் காரணமாக இருக்கலாம். நாங்க வீடு வாங்கும்போதுகூட “நல்ல வெயில் வர்றமாதிரி இருக்கணும்” என்பதுதான் எங்களது இல்லத்திற்காக நான் கணவரிடம் வைத்த கோரிக்கை. என் மலர்ச்சிக்காகவே காத்திருப்பவர் மறுக்கவா போகிறார்?

நான் குழந்தையா சுவீகரித்துக்கொண்ட வெயிலை ஏன்தான் மக்கள் இப்படி கரிச்சிக் கொட்டுறாங்க? தண்ணீரையும் நெகிழியையும் இவங்க வரம்பில்லாம புழங்கிட்டுப் பழியை அதன்மேல் போடுவதா? வெயிலேபடாது இருந்தால் என்னென்ன நோய்களெல்லாம் வரும்னு நினைச்சிப் பார்க்கிறாங்களா? இல்லை, இவங்களோட சொற்சூடு தாங்காம அது சில நாள் தலைகாட்டாவிட்டால் என்னாகும்னு நினைக்கிறாங்களா?

வானிலிருந்து தேனைப்போல வழியும் வெயில்தான் மனிதர்களுக்குச் சுறுசுறுப்புக்கான டானிக் என்பதை மறந்துடறாங்களே! நித்திய வாழ்க்கைக்குத் தொந்தரவில்லாததும் அதுதான் என்பதை
நினைப்பார் இல்லையே! வீட்டுக்குள்ளே வெயில் வரும் சுகமே அலாதிதான். விருப்பப்பட்டச் செடிகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் தோட்டம் இல்லாத குறையை நிவர்த்தி செய்துக்கலாம். நாம் வைத்திருக்கிற செடியில ஒரு பூ பூத்தால்கூட அதென்னவோ புத்தாண்டுக்கான வாணவேடிக்கை ஒளிர்கிற மாதிரி மனத்துக்கு நிறைவாக இருக்கும்! அதுமட்டுமில்லாம வீட்டிலிருக்கும் அலமாரியை அலங்கரிக்க பவுடரைப் பூசினமாதிரி பூஞ்சைக் காளான் குடுத்தனம் செய்யத்தான் முடியுமா? வெல்லப்பாகைப்போல வழிந்தோடும் வெயிலைப் பார்த்தாலே எனக்கு உடம்புக்குப் புதுசாத் தெம்பு கிடைச்சிடும். வீட்டுக்கு வெளியே துணிகள் காய இடம்பிடிப்பது மட்டுமல்லாது, அலமாரியில் இருக்கும் துணிங்ககூட வந்து நான் நீன்னு வெயிலை விழுங்கும்.

போதாக்குறைக்கு மெத்தை, தலையணை, போர்வைகள் எல்லாம் வீட்டுக்கு எதிரேயுள்ள நடைபாதையில் வெயிலைத் தின்றுகொண்டிருக்கும். “உங்க வீட்டில் கைக்குழந்தையா இருக்கு? எப்போ பார்த்தாலும் படுக்கையைக் காய வைக்கிறாயே?” செந்நிற நிலவைக் கண்டதைப்போலப் பக்கத்துவீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த சமீரா கேட்டாங்க. ‘குழந்தை இருந்தால்தான் படுக்கையைக் காய வைக்கணுமா? வெயிலைக் குடித்த மதர்ப்பில் விறைத்திருக்கும் படுக்கையில் படுக்கும் சுகத்தை இவங்கல்லாம் எப்படி அறியாமல் இருக்காங்க?’ இப்போதெல்லாம் கண்குளிர வெயிலை ரசிக்கத்தான் முடியுது. தட்டுத் தடுமாறி நடந்து வந்த கணவர் சன்னலை நல்லா திறந்து வைத்தார். அந்த அன்பில் குடம் வெயிலைக் குடித்ததைப்போல நிறைந்தேன்.
இந்த வீட்டைவிட்டுப் போகணும்னு நினைச்சாலே வருத்தமாதான் இருக்கு. இருவரும் இயலாமையில் உழலுவதைவிட மகன் புதுசா வாங்கும் வீட்டில் இருப்பதும் நல்லதுதான்!

“இந்த வீட்டோட சிறப்பம்சம் என்ன தெரியுமா? காலை வெயிலை இதோ எதிரிலிருக்கும் கட்டடம் மறைச்சுக்கும். சாயந்திரம் வெயில் சுத்தமா வரவே வராது” வீட்டு முகவர் சொல்ல மகனது முகம் மலருகிறது. பனிப்பாறையில் நிற்பதைப்போல என் கால்கள் ஏன் இப்படி நடுங்குகின்றன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here