கவிஞர் ந.வீ.விசயபாரதியின் மணிவிழா நூல் வெளியீடு

0
412

புகைப்படம் : நன்றி தியாக. இரமேஷ்

நேற்று மாலை கவிஞர் ந.வீ.விசயபாரதியின் இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றபோது, தமிழ் அறிஞர்கள், அமைப்புத் தலைவர்கள், அவரது தமிழ் நதியில் நீச்சலடித்த இளங் கவிஞர்கள், அவரின் பண்புப் பழக்கங்களில் அடிமையானோர்….அத்தனைபேரும் ஆஜர்!

மேடையில் பாரம்பரியம் தலை நிமிர்ந்து நின்றது! காரணம், நூல் வெளியீட்டுடன், கவிஞர் விசயபாரதி-கமலா தம்பதியினரின் மணிவிழாவும் கை கோர்த்து நின்றது தான். வேதநாயகி செல்வம், இந்துமதி ராமநாதன் என்கிற அருமைப் புதல்விகள்-(இருவருமே சிங்கை மண்ணில் தமிழ் சுவாசிப்பில் தடம் பதித்தவர்கள்) , நாயகக் கவிஞரின் அன்புச் சகோதரர் – சிங்கையின் சேவைச் செல்வன், நல்ல கவிஞர் சத்தியமூர்த்தி, மகள் வேதாவை பாசமிகு மருமகளாக ஏற்ற நம் மதிப்பிற்குரிய சம்பந்தி புதுமைத்தேனீ மா.அன்பழகன்-திலகவதி தம்பதிகள், பேத்தி தாரா உட்பட அத்தனை பேரும் அந்த மேடையில் அழகுக் கோலம் விரித்து நின்றனர்!

அழகிய சிங்கப்பூரில் அதனினும் அழகிய ஜாம்பவான் ஓடையை நேற்று கிராமியம் சொட்டக் கண்டோம். கவிதை நதியின் நூல் வெளியீட்டில் நிறைய அங்கங்கள்! ஆனாலும் இன்றைய  கபினி திறந்ததுபோல் நிகழ்வுகள் ..ஓட்டம்…ஓட்டம்! இது இப்போது நெறியாளர் கவிஞர் இன்பாவுக்குக் கைவந்த கலையாகி விட்டது.

வரவேற்புரை வழங்கிய மா.அன்பழகன், கவிஞர் விசயபாரதி 1997ல் இங்கு வந்து தன் கவிதைப் ‘பூட்டுகளை’ முதன் முதலாகத் திறந்ததை – மென்மைத் தமிழில் மேன்மை காட்டிய பாங்கை-கவிஞர்களுக்குக் கவிஞராகவும், ஆசானாகவும் விளங்கியதை-மரபுத் தோற்றத்தில் புதுமணம் கமழக் கவிதைச் சரங்களைத் தொடுத்ததை அழகாக வர்ணித்தார். கிராமத்தில் சிறு கடை நடத்திக் கொண்டே கவிதை வளர்த்த கதை, சுறுசுறுப்பான ‘பிட்’ நியூஸ்!

அறிஞர் சுப.திண்ணப்பன், வில்லையும், சொல்லையும் இணைத்த பாரதிபோல் விளங்கும் மணிவிழா நாயகனைத் தங்கச் சொல் எடுத்துப் பாராட்டினார். ஒருபொருள் பற்றிப் பல கவிதை பாடும் அவரின் திறன் தன்னை வியக்க வைத்தது என்றார். கவியரங்க மரபுப்படியும், அதே நேரத்தில் சூழ்நிலைக் கேற்பவும் கவி வடிக்கும் விஜயபாரதியின் வித்துவத்தைப் பாராட்டினார். உருவாக்கத்துடன் படைத்தலிலும் வி.பாரதி தனித்துவம் கண்டவர் என்றார்.

கவிஞர்கள் கருணாக்கரசு, கி.கோவிந்தராசு இருவரின் சொல்லழுத்த வாழ்த்துப்பாக்கள், மாணவப் பணிவுடன் அமைந்தன.

கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூரில் நூலாசிரியர் நிறுவிய கவிதை வளர்ச்சியின் அடித்தள நிர்மாணங்களைக் குறிப்பிட்டார். ஜாம்பவான் ஓடையில் உருவான கவிஞர் விசயபாரதி, இன்று சிங்கப்பூரில் நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடுவதை உணர்வோடு எடுத்துச் சொன்னார். கணையாழி தந்து தம்பதிகளை அவர் பாராட்டியது, அனைவருக்குமே கணையாழி தந்த உணார்வை ஏற்படுத்தியது. வள்ளல் போப்ராஜ் , தம்பதிகளுக்கு வழங்கிய ரோஜா மாலைகளின் நறுமணம், ஆனந்த பவன் அரங்கத்தின் அடுத்த அயிட்டங்கள் மினி இட்லி, பொங்கல், பயற்றங் கஞ்சியின் மணத்தையும் தூக்கிச் சாப்பிட்டது.

கவிஞர்கள் லலிதா சுந்தர், கலைச்செல்வி ஆகியோரின் நூலாய்வுகள் சிறப்பாக அமைந்தன. 6 கவிதை அரங்கங்களை விமர்சன அசை போட்ட கலைச்செல்வி, இன்னும் சற்று குறைத்திருக்கலாம். முன்பே வந்து நாம் அசை போட்டவை இவை.

’காற்று வாங்க வந்தேன்-கவிதை வாங்கிச் சென்றேன்’ என்ற பாடலை நினைவுபடுத்தியது திரு.இரா.தினகரன் அவர்களின் பேச்சுத் துவக்கம். கேட்க வந்தேன் -பேச வைக்கிறார்கள் என்ற அவர், நூலாசிரியருக்கு ஓர் வேண்டுகோள் வைத்தார். சிங்கப்பூர் தமிழர்களுக்குத் தேவையான கருத்துக்களை நிறைய எழுதுங்கள் என்பது அந்த அவசியமான அறிவுரை!

கவிஞர் விசயபாரதி செய்நன்றி உரையாகத் தன் வாழ்வில் புகுந்து புறப்பட்ட அத்தனை பேரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here