கொய் தாத்தா – இந்துமதி

0
181
Koi fish

லிங்கத்திற்கு வெகு சீக்கிரமே முழிப்பு வந்து விட்டது. சொல்லப் போனால் அவர் இரவு முழுவதுமே தூக்கமில்லாமல் கழித்திருந்தார். அவர் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் பதினோரு மணிக்கு வருவதாய்க் கூறியிருந்தனர். மணியைப் பார்த்தார். இன்னும் சில மணி நேரங்களில் எல்லாம் முடிந்து விடும்.

மேஜையிலிருந்த கண்ணாடியை அணிந்து கொண்டவர், மெதுவாக நடந்து வெளிக் கதவருகில் வந்தார். தண்ணீர் அலையும் சப்தம் அவர் காதுகளை நிறைத்தது. ஒரு நாள் கடைத்தெருவில் புதிதாய் ஆரம்பித்திருந்த செல்லப் பிராணிகள் கடையைக் கடந்த போது வெளியே வைக்கப்படிருந்த கண்ணாடித் தொட்டியில் மீன்களைப் பார்த்தார். ஒரு நொடி கூட சும்மா இல்லாமல் நீருக்குள் அனாயாசமாய் நீந்தித் திரிந்த வெள்ளையும் ஆரஞ்சு வண்ணமும் கலந்த மீன்கள் அவர் உள்ளம் கவர்ந்தன. அவற்றின் அழகில் லயித்து வெகுநேரம் அங்கு நின்றிருந்தார். அன்று அவர் வீடு திரும்பிய போது ஒரு நெகிழிப் பையில் ஒரு டஜன் கொய் மீன்களும் வந்தன.

“இந்த மீனுங்க வீட்டுல இருந்தா தங்களோட மூதாதையர் வீட்டுல இருக்க மாதிரி நெனப்பாங்களாம் ஜப்பன்காரவுங்க. நமக்குப் பிள்ளக தான் இல்ல. நம்ம நல்லது கெட்டத பாத்துக்குற முப்பாட்டனா இருக்கட்டுமேனு வாங்கியாந்தேன்..” கலாவிடம் சிரித்தபடி சொன்னார். அதன் பின் அந்த மீன்கள் அந்த வீட்டின் உறுப்பினர்களாகி விட்டனர்.
“நல்ல வெளிச்சத்துல வச்சாதான் அதுக நிறம் நல்லா பளிச்சுனு இருக்கும்” என்றவர் அவர்களின் தரைத் தள வீட்டின் முகப்பில் மீன் தொட்டியை வைத்தார். சென்ற வருடம் கலா மறைந்த பின் அவைதான் அவருக்கு மிஞ்சி இருக்கும் சொந்தங்களாயின.

ஒவ்வொரு மீனுக்கும் லிங்கம் ஒரு பெயர் வைத்திருந்தார். பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் ஆரஞ்சு திட்டுக்களின் அமைப்பைக் கொண்டே அவற்றை இனம் கண்டுவிடுவார். மீன்கள் சீக்கிரமே தொட்டியைத் தாண்டி வளர்ந்தன. அவற்றை எங்கே மாற்றுவது என்ற குழம்பிய போது அவருக்கு அந்த யோசனை தோன்றியது.
வீட்டிற்கு வெளியே இருந்த படிகளில் சின்னதாய் வழிவிட்டு ஒரு பிரம்மாண்ட தொட்டியைக் கட்டினார். பாதுகாப்பிற்காக ஓரங்களில் உலோகக் கம்பிகளை அடைத்தார். மீன்கள் இப்போது பெரிய தொட்டியில் உலா வருவது கண்டு மகிழ்ச்சியுற்றார். அந்த மகிழ்ச்சி அவரோடு நிற்கவில்லை. அந்த மீன்கள் அங்கு குடியிருந்த மற்றவர்களின் கவனத்தையும் ஈர்த்தது முக்கியமாக குழந்தைகளை.

தினமும் நான்கைந்து சிறுவர்கள் அந்த மீன்களைப் பார்க்க வந்தனர். பிரம்மாண்ட மீன்தொட்டியின் புகழ் அக்கம் பக்கங்களில் பரவியது. அருகிலிருந்த பள்ளிகளிலிருந்து குழந்தைகள் மீன்களைக் காண வந்தனர்.

மனிதர்களின் வாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு, புதிய வரவுகள் பாலைவனச் சோலையாய் இனித்தன. பக்கத்துக்கு வீட்டினரின் சிநேகப் பார்வைகள் உயிருக்கு உரமளிப்பவையாய் இருந்தன. எப்போதும் வாழ்வில் தென்றல் மட்டும் வீசுவதில்லை. அவரின் மீன்தொட்டி விதிமுறை மீறிக் கட்டப்பட்டிருப்பதாய் வீடமைப்பு வளர்ச்சி கழகத்திலிருந்து கடிதம் வந்தது. லிங்கத்தின் மேல் முறையீடுகளும் தோல்வியில் முடிந்தன. வெறுமை கப்பியிருந்த படிகளில் லிங்கம் அமர்ந்திருந்தார். பெற்ற மக்களைப் பறிகொடுத்த சோகம் கண்களில் தெரிந்தது.

“கொய் தாத்தா…”

எதிர்வீட்டிலிருக்கும் நான்கு வயது மீனாவின் குரல் லிங்கத்தின் உதட்டில் புன்னகையை வரைந்தது.

– இந்துமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here