மாத்தி யோசி – எதிர்கால தமிழ் / தமிழருக்கான மாற்றுவழி பரிந்துரை

0
221

ஏதாவது ஒரு விழா, அதில் சில புகழுரைகள், நீண்ட புரியாத இலக்கிய உரைகள் இல்லை சில பட்டிமன்றம் அதில் சில மொக்கைகள் இல்லை வட்டம் சதுரம் என கணக்காக நடத்தப்படும் கூட்டங்கள் என எங்களை ஈர்க்காத நிகழ்வுகளாக நகர்ந்து கொண்டிருக்கும் தமிழ் வளர்ப்பு பணிகளுக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள் என இளையர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அவர்களின் களம் வேறாக, அவர்களின் எண்ணப்போக்கு முற்றிலும் மாறாக இருப்பதை எடுத்துச் சொன்னது நேற்றைய ‘மாத்தி யோசி’ கருத்தரங்கில் கலந்தாலேசிக்கப்பட்ட கருத்துகளின் பகிர்வு நிகழ்வு.

தமிழர் பேரவையின் இளையர் பிரிவு கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி ‘மாத்தி யோசி’ என்ற இளையர்களுக்கான கருத்தரங்கை ஒன்றை நடத்தியது. அதில் தமிழ்மொழியும் கலையும், சமூக மேம்பாடு, தொழில்முனைவோர், சமூக அரசியல், விளையாட்டும் ஆரோக்கியமும், தொழில்நுட்பம் என்ற ஆறு பிரிவுகளில் இளையர்களின் கருத்தை கேட்டறிந்தது. இதில் சுமார் 100 இளையர்கள் கலந்துகொண்ட கருத்துக்கணிப்பை அடிப்படையாக கொண்டு சிங்கை தமிழ்ச் சமூகத்தின் மீதான இளைஞர்களின் பார்வை, அதில் இளையர்களின் தேவை, அடிப்படை பிரச்சனைகள், அவற்றிற்கான தீர்வு, செயல் திட்டம் இப்படி பலவற்றையும் கருத்தரங்கில் ஆராய்ந்த இருக்கிறார்கள். ஆனால் இவை ஒட்டுமொத்த தமிழ் இளயர்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்றால் இல்லை என்று அவர்களே கூறுகின்றனர். இது ஒரு குறிப்பிட்ட சாராரை கொண்டு எடுக்கப்பட்டு கருத்துக்கணிப்பு என்கின்றனர். என்னைக் கேட்டால் இதுவே ஒரு பெரிய தொடக்கம் என்பேன்.

கடந்த ஐந்து மாதத்தில் பல குழுக்களாக பிரிந்து பல்வேறு கூட்டங்கள், கருத்துரையாடல், கணக்கெடுப்பு என பல வழிகளில் திரட்டப்பட்ட
இளையர்களின் எண்ணப்போக்கை பதிவு செய்திருக்கிறது இளையர் பிரிவு. அதன்
சாராம்சம்ததை சிறப்பாக தொகுக்கப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டு நேற்று வெளியிட்டார்கள். இதில் இந்த ஆறு பிரிவுகளில் உள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என 13 முக்கிய பரிந்துரைகளைக் முன் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தாலும் மிக நேர்த்தியாக கருத்துகளை எந்தவித இடைச் செருகலும் இல்லாமல் தொகுத்திருக்கிறார்கள். இதற்கே கணிசமான நேரமும் உழைப்பும் தேவைப்பட்டிருக்கும்.

இதில் சிறப்பு என்னவென்றால் 13இல் 9க்கான செயல்திட்டத்தை ஏற்கனவ செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஒரு 300பேர் கலந்துகொள்ளும் விழா நடத்த 3 மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு, பல விளம்பரங்கள் வெளியிட்டு, இரண்டு மூன்று இளையர்களை மேடையேற்றவும், பத்து இருவது மாணவர்களை கூட்டத்துக்கு வரவழைக்கவும் பல போட்டிகள் வைத்து சிரமப்படும் வேளையில் இளையர்கள் தாங்களாகவே இஷ்டப்பட்டு கூடி கஷ்டமான இப்படியொரு பணியை மிகச் சாதாரணமாக சத்தமில்லாமல் செய்திருப்பது பாராட்டத்தக்க செயல்.

சரி, அப்படி என்னதான் சொல்கிறார்கள். ஒரு நிகழ்வுக்கான பெயரிலும் அழைப்பிதழ் வடிவமைப்பதிலும் தொடங்க வேண்டும் இளையர்களை ஈர்க்கும் பணி என்கின்றனர். சொல்வதோடு நில்லாமல் அவர்களின் செயல்திட்டத்தில் அதை நிறைவேற்றியும் இருக்கிறார்கள். அவர்களின் ‘மாத்தி யோசி’யில் தொடங்கி ‘என்ன mic’, ‘தாத்தா, பாட்டி and me’, கலாய்ச்சிஃபை, Candid Confessions, வணிக வேட்டை, ‘வாங்க பழகலாம்’, ‘வாசி மா’(செயலியின் பகுதி) என பெயர்கள் மட்டுமில்லாமல் நிகழ்வுகளும் மாறுபட்டதாகவே உள்ளன.

இவர்களின் வணிகவேட்டை நிகழ்வு அவர்களின் சிந்தனைக்கும் சிறப்பான செயலுக்கும் ஒரு சான்று. அது குறித்து கடந்த மே ஒன்றாம் தேதி முகநூலில் பதிவு செய்திருந்தேன். (https://www.facebook.com/100000065563092/posts/2498736820138479?s=100000065563092&sfns=mo)
இதுபோன்று பல பயனுள்ள நிகழ்வுகளை நடத்தவிருக்கின்றனர்.

நேற்றைய நிகழ்வில், தமிழர் பேரவையின் இளையர் பிரிவு சிங்கை தமிழ் சமூகத்திற்காக தாங்கள் உருவாக்கிய ‘குறி.sg’ என்ற செயலி குறித்த தகவல்களை வெளியிட்டனர். விரைவில் பொது மக்களுக்காக வெளியீடு காணவிருக்கும் இச்செயலி ஒன்றரை மாதக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது ஒரு சாதனையே. இது போன்ற ஒரு செயலி குறித்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் அருணிடமும் பின்னர் ரூபனிடமும் பேசியிருக்கிறேன் ஆனால் செயல்படுத்தவில்லை. இவர்கள் பல அம்சங்களுடன் இதை குறுகிய காலத்தில் உருவாக்கியிருப்பது சிறப்பு. இதில் சிங்கையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த விவரங்கள், பதிவு செய்யும் வசதி, பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறும் வசதி, பின்னூட்டமடும் வசதி என பல ஒருங்கிணைந்த சேவைகள் உள்ளன. தமிழ்மொழி விழா மற்றும் பல தமிழ் நிகழ்வுகளை அமைப்புகள் இதில் பதிவேற்றிவிட்டால் அனைவரும் தங்கள் திறன்பேசி நாள்காட்டியில் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி தேசிய நூலகத் துணையுடன் ‘வாசி மா’ என்ற பகுதியில் தமிழ் நூல்களை பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். இப்படி சமூகத்திற்கு தேவையான பல வசதிகளுடன் இளையர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அமையும்.

நேற்றைய நிகழ்வில் என்னைக் கவர்ந்தது நிகழ்ச்சி நெறியாளர், புரவலர்கள்/தலைவர்கள் சிறப்பு செய்தல், சிறப்பு விருந்தினர் உரை இப்படி எதுவும் இல்லாமல் முதலிருந்து கடைசி வரை ஒன்றரை மணி நேரம் இளையர் பிரிவின் தலைவர் திரு அருணின் உரை மட்டுமே இடம்பெற்றது. மிக அழகாக எந்தவித தடங்கலுமின்றி தான் சொல்ல வந்த கருத்தை கோர்வையாக தொகுத்து வந்திருந்தவர்களை சென்றடையும் வண்ணம் சிறப்பாகச் சொன்னார்.

இவர்களின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், தேசிய நூலகம், பல்கலைக்கழகங்கள், அரசு அமைப்புகள், இணை அமைப்புகள், மற்ற தமிழ் அமைப்புகள் என எல்லோருடனும் இணைந்து பணியாற்றும் எண்ணப்போக்கு. 2025ஆம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என இப்போதே திட்டம்போட்டு செயல்படுகின்றனர். யாரையும் முன்னிலைப் படுத்தாமல் ஒரு குழுவாக இயங்குவது, எல்லோரும் ஒற்றை நோக்கத்தை நோக்கி பயணிப்பது என சில விழுமியங்களை ஏற்று செயல்படுகின்றனர். இதை தமிழ்ச் சமூகம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிங்கை தமிழ் அமைப்புகளுக்கு தங்களின் கலந்துரையாடலின் பரிந்துரைகளை பகிரும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்து அனைவரையும் அழைந்திருந்தாலும், வழக்கம் போல் 5 அல்லது 6 அமைப்பினைச் சேர்ந்த தலைவர்கள்/பிரதிநிதிகளே வந்திருந்தனர். குறிப்பாக தமிழர் பேரவையின் துணைத் தலைவர் திரு மசூது அவர்கள் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முழு ஆதரவையும் மற்ற முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், சிங்கை மசூதிகளின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் தொடர்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்திருக்கின்றார். தமிழ் அமைப்புகள் இளையர்களை தேடி கண்டுபிடித்து தங்கள் நிகழ்வுகளில் பங்கு பெற வைப்பது ஒரு புறம் இருந்தாலும் இளையர் பிரிவின் நிகழ்வுகளை சேர்ந்து நடத்தலாம், அவர்களின் பரிந்துரைகளை பரிசீலித்து அவர்களுடன் கூட்டாக செயல்படலாம், செயல் திட்டத்தில் பங்கு பெறலாம், அதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகத்துடன் புதிய பல விஷயங்களை நடைமுறைப்படுத்தலாம்.

இளையர்களின இம்முயற்சியை அமைப்புகள் தாண்டி ஒத்த நோக்குடன் வரவேற்போம், வாழ்த்துவோம், வளர உதவுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here