மகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)

0
433

மகா மாரியம்மன் கோயில்

சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ் இருந்த கிழக்கு இந்திய கம்பெனி முதன்முதலாக 1822ல் இக்கோயில் கட்ட பரிசீலனை செய்து 1823ல் அனுமதி வழங்கியது. இக்கோயிலை கட்ட தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களிலுருந்து சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களே வலியுறுத்தினர். அவர்களின் கடின உழைப்பால், 1827ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. நாராயணப் பிள்ளை என்கிற தமிழரின் விடாமுயற்சியே இக்கோயில் உருவாக முழுமுதற் காரணம் என கூறுகின்றனர். இக்கோயிலின் முதல் தெய்வமாகவும், மூலவராகவும் மாரியம்மனே அருள்பாலிக்கிறார். முதலில் சிறு கோயிலாக வடிவமைக்கப்பட்ட இக்கோயில் 1862ல் முழுமையான கட்டிடமாக மாற்றப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு 1962ல் மீண்டும் இக்கோயில் தற்போது உள்ள நிலைக்கு புதுபிக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன.

சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்படுகிறது. மகா மாரியம்மன் கோயிலின் முதல் குடமுழுக்கு 1936ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் 1949,1977,1984, 1996 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக குடமுழுக்குகள் நடைபெற்றன. இக்கோயில் சீனர்கள் அதிகம் வாழும் சீனாடவுன் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி திருவிழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திரெளபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா 1842 முதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரெளபதை உற்சவம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

Address: 244 South Bridge Rd, Singapore 058793

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here