மூக்குத்துறவு சிறுகதை விமர்சனம் – வித்யா அருண்

0
51

கதைக்கான சுட்டி இதோ

உலகின் கடைசி நாள் எப்படி இருக்கும்? , உலகின் முடிவு எதனால் அமையும் என்பதைப்பற்றிய அறிவியல் புனைவுகளால் ஆக்கப்பட்ட ஆங்கிலப்படங்கள் அதிகம். உதாரணத்திற்கு இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு(2007) வெளிவந்த  “I am Legend” என்ற படத்தை சொல்லலாம் .

அந்தப்படத்தில் புற்றுநோய்க்காக  கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மாறுபட்ட குணத்தினால் குலைகுலையாக மனிதர்கள் இறந்து போவார்கள். கதையில் உலகின் கடைசி மனிதனாய் வரும் நாயகன் எப்படி மனிதர்களின் நீட்சிக்குகாரணம் ஆகிறார் என்பது கதையின் மீதிக்கதை. இவ்வகையான படங்கள், வேறுபட்ட கற்பனையாலும், பிரமாண்டமான காட்சிப்படுத்தலாலும் தான் உலகின் பலநாடுகளில் இருக்கும் பல மொழிபேசும் மக்களையும் ஈர்க்கின்றன.

நம் தமிழ் இலக்கியத்தில் இவ்வகை புனைவுகள் இல்லையா? நம் இதிகாசங்களில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன. கடலைக்கடக்கும் அனுமன் பலவிதமான தடைகளைத் தாண்டுவார்.

கம்பராமாயணத்தில் அங்காரத்தாரை என்ற ஒரு பாத்திரம், நிழலை பற்றி இழுக்கும் வலிமை உடையது.

சாயா வரம்தழுவினாய் தழியபின்னும்
ஓயாஉயர்ந்தவிசை கண்டுமுணர் கில்லாய்
வாயால் அளந்துநெடு வான்வழி அடைத்தாய்
நீயாரை? என்னைஇவண்நின்றநிலை என்றான்.

அவள் வாயால் வான்வழி முழுவதையும் அடைத்துவிட்டாளாம். நன்னெறியை புகட்டுவதற்காக நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லும் இதிகாசக்கதைகளில் இருக்கிற புனைவுகள் தான்  அவர்களின் மனதில் இந்தக்கதைகளை நினைவில் நிலைபெறச்செய்கின்றன.

மூக்குத்துறவு என்ற சிறுகதையின் மையப்புள்ளி மூச்சை அடக்குதல்l. மூச்சும் மனதும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. திருமந்திரம் ” பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்

பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை” என்கிறது. மனதோடு மிகநெருங்கிய பிராணனை அடக்குபவர்களுக்கு பிறப்பு, இறப்பு என்கிற சுழற்சிகள் இல்லையாம்.

எனக்கு மிகவும் பிடித்தது இந்தக்கதையின் தலைப்பு. புரட்டாசி மாதம் வந்தாலே , அசைவ உணவு பிரியர்களுக்கு அதைத் துறப்பது பெரிய காரியம் தான். மூக்கைத் துறப்பது ஏன்? என்ற கேள்வியோடு வாசகர்களைக்கதைக்குள் இழுக்கிறது இந்தத்தலைப்பு.

நல்ல வாசிப்பாக அமைந்தாலும் தர்க்க ரீதியாக கதை முழுதும் எனக்குக்கொஞ்சம் சிக்கல்கள் இருந்தன. ஒரு மூக்கு ஓட்டையை அடைத்தால் மட்டும் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு குறையுமா என்பது அதில் முதல் கேள்வி.

ஒரு நாளைக்கு இருநூறு வார்த்தைகளுக்கு மேல் பேசக்கூடாது, மெதுவோட்டம் ஓடக்கூடாது, கவலை, மகிழ்ச்சி, அன்பு எல்லாவற்றையும் முடிந்தவரை நிராகரிக்க வேண்டும். இப்படி ஒரு சூழலில் வாழ்தல் இனிதா? அப்படி வாழத்தான் வேண்டுமா? என்பது அடுத்த யோசனை.

மனிதர்களின்  ஆயுள் ஐம்பது வயது என்று அரசாங்கம் கட்டுப்படுத்திகிற சூழலில், குரங்கை மட்டும் எப்படி விட்டுவைத்தார்கள்?

சமீபத்தில் நமது சாங்கி விமானநிலையத்தில் நான்காவது முனையத்தில், தானியங்கி இயந்திரங்கள் சுத்தம் செய்வதைக்கண்டேன். இந்தக் கதையில் நீரோடையில் மிதக்கும் செத்த எலி போன்றவற்றை ஒரு தொழிலாளி அகற்றிக்கொண்டிருப்பதாக ஒரு வரி வரும் . வளர்ந்து  வரும் இயந்திர யூகத்தினால் தான் காற்று மாசு அதிகம் என்றால், ஏன் இன்னும் மனிதர்கள் இந்தக்கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்?

ஒருபக்கம் மனிதமலத்தை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கப்போராடுகிறோம். இன்னொருபக்கம், அசுரவளர்ச்சியால் காற்றுக்குறைந்த உலகிலும் மனிதர்கள் தான் இதுபோன்ற வேலைகளைச்செய்கிறார்கள்  என்பது முரண் இல்லையா?

ஒரு நல்ல இலக்கியம் என்பது படிக்கும்போது நாம் அதற்கு முன்னர் படித்த நூல்களையோ, அல்லது அனுபவங்களையே நினைவுபடுத்தும். கதையில் தாதி காட்டும் பச்சை இல்லை எனக்கு ஓ ஹென்றியின் Last Leaf (கடைசி இலை) என்ற கதையை நினைவுபடுத்தியது.

இரண்டாயிரம் ஆண்டில் தில்லியின் குளிர்கால ஒரு முன்னிரவு நேரம். அத்தனை வாகனப்புகையும் வானில் மேல் எழமுடியாமல், எல்லார் கண்களிலும் அமிலம் வார்த்தது. அன்று பெரிதும் கேள்விப்படாத காற்றுமாசு இருபது ஆண்டுகளில் இன்று வளர்ந்து வரும் நாடுகளின் பெய்ஜிங், பாங்காக், சென்னை  முதலிய எந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை.

இன்றைய நவீன சந்தையில் அறையை வருடம் முழுவதும் அடைத்து வைத்தாலும், காற்றின் ஈரத்தன்மையை சீர் செய்து, காற்றின் நச்சைகுறைத்து காற்றை பலமடங்காக அதிகரிக்கும் மின்னணு பொருட்கள் வந்துவிட்டன. (Air Multipliers, HEPA Filters, Humidifiers).அவற்றின்சந்தை  இருப்பை நாம் கணக்கில் கொண்டால், இந்தக்கதையின் போக்கு பாதிக்கப்படக்கூடும்.

கதையின் முடிவு ஊகிக்கப்படும்படியாக இருந்தாலும் மானுடம் தோற்ற ஒரு நிகழ்வில் மனிதர்கள் இன்னும் வாழ்வதால் என்ன பயன் என்ற கேள்வி எழாமல் இல்லை.

கதையில் இடைச்செருகலாக இருந்த இறைத்தூதர்களை பற்றிய வரிகள் பலம் சேர்க்கவில்லை.

 காற்றுமாசைப்பற்றிய கவலையோடு, இந்த அசுரச்சூழல் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்ற யோசனையையும் வாசகர்களுக்கு இந்தக்கதை  நிச்சயம் ஏற்படுத்தும். (முற்றும் )


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here