மணிமாலா செம்பருத்தி

0
475

முகநூல் தோழியான சுடர்விழியை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. என்னை ஒரு
கணமாவது இழுத்து நிறுத்திவிட்டுப் பின் கடக்கச் செய்யும் அவளது பதிவுகளுக்கு விருப்பமோ
கருத்துகளோ இட்டதுமில்லை. ‘என் மகளைப்போலவே செடிகளின்மீது பற்றுடையவளாய் இருப்பதால்
அவள்மீது நன்மதிப்பு பிறந்ததோ? முப்பதாண்டுகளுக்கு முன்னே சமைக்கக் கற்றுக்கொண்ட புதிதில்
ஏதேதோ சமைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேனே அதைப்போலவே இவளும் செய்வதால் பிடிமானம்
உண்டானதோ? எனக்குப் பிடித்த வண்ணங்களில் உடைகளை அணிகிறாளே அதனாலோ?’ முடிவுக்கு
வரமுடியவில்லை.

அவளது கவிதையைப்போல அவளுடைய முகநூல் பக்கத்தில் நித்தியக்கல்யாணி
குலுங்கிக்கொண்டிருக்கும். அடிக்கடி மஞ்சளும் சிவப்புமாகச் செம்பருத்திகள் இதழைப் பிரித்துச்
சிரிக்கும். அவளது கவிதையை உள்வாங்கிய மாதிரி நாளடைவில் அவளது முகத்தைக்கூட
என்னையறியாமல் செம்பருத்திப் பூவைப்போலவே நினைக்குமளவிற்கு வந்திருந்தேன்.
அவளது ஆடையலங்காரங்களைப்போலவே தன் அதீத ரசனையை உணவின்மீதும்
காட்டுவாள். தான் தயாரித்த உணவுகளை நாளும் முகநூலில் பதிவிடுவாள். வண்ணமயமாக இருக்கும்
காய்கறிகள், சமைத்துவிட்டால் மட்டும் சத்துக்களை இழந்து விடுவோமா என்று சொல்வதைப்போல
இருக்கும். கோழி பிரியாணியின் வாசம் நெருங்கி வந்து நாசியை நிரடுவதைப்போலத் தோன்றும்.
சாதாரணமாக ரசம், தவ்வு சம்பால், அப்பளம் என்று அவள் பதிவிட்டிருந்தால்கூட ‘நாளைக்கு இந்த
மாதிரிதான் சமைக்கணும்’ என்று எனக்குத் தோன்றும்!

எதிர்பாராது ஒருநாள் சுடர்விழியை சந்திக்கும்படியானது. முகநூலில் கண்டுகொள்ளாமல்
விட்டதைப்போலச் செல்ல முடியுமா? இவ்வளவு நாட்களாக மனத்தில் இருந்தவற்றில் எள்ளளவில்
எடுத்துக் காட்டினேன். அவளது முகத்தில் பல செம்பருத்திகள் முகிழ்த்தன. மிகவும் ஆர்வத்துடன்
அவளது வீட்டிற்கு என்னை அழைத்தாள். அன்பு தோய்ந்த வார்த்தைகள் சம்பிரதாயத்துக்காகச்
சொல்லப்பட்டவை அல்ல என்பதை உணர்ந்து நெகிழ்ந்தேன்.

“வீட்டுக்கு வர்றவங்களுக்குப் பிடிச்ச மாதிரி சமைச்சுக் கொடுக்கிறது எனக்கு ரொம்பவும்
பிடிக்கும். எந்த மாதிரியான சாப்பாடு உங்களுக்குப் பிடிக்கும்னு மட்டும் சொல்லிடுங்க” ஆர்வத்தைக்
குழைத்துச் சொன்னாள். மனத்தில் பட்டதை ஓரிரு சொற்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்த என்னை
அவளது வார்த்தைகள் கட்டிப்போட்டன. முதல் அறிமுகத்திலேயே ஒருவரின்மீது இவ்வளவு அன்பை
அள்ளியிறைக்க முடியுமா? அதிர்ந்துபோய் நின்றேன்.
“எப்போ வர்றீங்க?” உரிமையோடு விடுத்த அழைப்பில் மனம் கரைந்தது.
என் பார்வை அவளது கைகளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி டேட்டூவில் சிறகடித்து நின்றது.
எந்தக் கணமும் பறப்பதற்குத் தயார் என்பதைப்போல நுணுக்கமாய் வரையப்பட்டிருந்தது. அவளது
கலைநயத்தைப் பாராட்டாது இருக்க முடியவில்லை. “இங்கே பாருங்க” அவள் புடவையைச் சற்றே
உயர்த்த, கால்களில் அழகிய செம்பருத்தி மலர்ந்திருந்தது. பூவிலும் இலைகளிலும் தண்ணீரைத்
தெளித்ததைப்போலத் தத்ரூபமான ஓவியம். நிச்சயமாகப் பச்சைக்குத்தியதாக இருக்க முடியாது என்ற
நம்பிக்கையில் “இதெல்லாம் ஸ்டிக்கர்தானே?” என்றேன்.
“பச்சைதான்!”

கருணையின்றிக் காயும் கத்திரி வெயிலை வாளியில் வழித்து என்மேல் ஊற்றியதைப்போலச்
சுருங்கினேன். “பச்சையா…? இப்படி வரையும்போது எவ்வளவு வலிச்சிருக்கும்…?” என்னால்
முன்புபோலப் பேசமுடியவில்லை.
இதெல்லாம் ஒரு வலியே கிடையாது என்பதைப்போன்ற பாவனையோடு, “கையில் இருக்கும்
பச்சை என்னோட தோழியின் மறைவுக்கானது. இந்தச் செம்பருத்தி என் அப்பாவோட
நினைவுக்கானது” என்றவள் முகத்திலிருந்த வருத்தத்தை வறண்ட புன்னகை மறைக்க முயன்றது.
இப்போதெல்லாம் சுடர்விழியுடைய முகநூலின் பதிவுகளைக் கனக்கும் இதயத்தோடு சட்டென
நகர்த்திவிடுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here