சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்

0
569

சிங்கப்பூரில் புத்தமத கோயில்களுக்கு நிகராக இந்து மத கோயில்களும் உள்ளன. சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய கத்தோங் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த செண்பக விநாயகர் திருக்கோயில். 1800 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கோயில் கட்டப்பட்டதாக வாய் மொழி வரலாறு கூறப்படுகிறது. சிங்கப்பூரின் மிக பழமை வாய்ந்த இந்து கோயில்களில் செண்பக விநாயகர் கோயிலுக்கு சிறப்பிடம் உள்ளது. கத்தோங் எனும் இடத்தில் உள்ள நீர் நிலையில் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அதனை செண்பக மரத்திற்கு அடியில் வைத்து மக்கள் வழிபட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த கோயிலில் உள்ள விநாயகருக்கு செண்பக விநாயகர் என்ற பெயர் வழக்கு உருவானது என்று ஊர் மக்கள் வாயிலாக தெரிய வருகிறது. ஆரம்பத்தில் மரத்தடி விநாயகராக இருந்த இதனை இலங்கையில் இருந்து 1875 காலக்கட்டத்தில் வசித்து வந்த தியாகராஜா எதிர்நாயகம் பிள்ளை என்பவர் மற்றும் இலங்கை தமிழ் மக்களும் சேர்ந்து நாள்தோறும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். மரத்தடி விநாயகருக்கு சிறு கூரை குடில் அமைத்து இவர்கள் தான் ஆரம்பத்தில் கோயிலாக கட்டினர். சிங்கப்பூரில் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இலங்கை தமிழ் சங்கம் 1909ம் ஆண்டு ஒரு மாபெரும் அமைப்பாக காலூன்றியது. அதனைத் தொடர்ந்து 1923ம் ஆண்டு இங்கு நிலம் வாங்கப்பட்டு கோயில் அமைக்கப்பட்டது. இலங்கை தமிழ் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயில், 1930ம் ஆண்டு சோமநாதர் முத்துக் குமார பிள்ளை என்பவரால் கல் கோயிலாக கட்டப்பட்டு முதன் முதலாக குடமுழுக்கு நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ஜப்பானியரின் குண்டு வீச்சால் ஆலயமும் அதன் சொத்துக்களும் சேதமடைந்தன. ஆனால், கருவறையில் வீற்றிருந்த செண்பக விநாயகர் சிலைக்கு சிறு சேதமும் ஏற்படவில்லை. 1955ம் ஆண்டு கோயில் மறுசீரமைக்கப்பட்டு அதன் இரண்டாவது குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடந்தேறியது. பின்னர். 1977ம் ஆண்டு மீண்டும் மறு சீரமைப்பு செய்யப்பட்ட காரணத்தால் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இக்கோயில் வந்தது. கோயிலின் மூலவராக விநாயகரும் வலது பக்கம் சிவனும், இடது பக்கம் மனோன்மணி அம்மையும் அருள்பாலிக்கின்றனர். ஆலயச் சுற்று வட்டத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தனி மண்டப ஆலயத்தில் காட்சியளிக்கிறார். மேலும், நடராஜர், சிவகாமி, பைரவர் உள்ளிட்ட பல தெய்வங்களும் கோயிலை சுற்றி மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

Address: 19 Ceylon Road, Singapore 429613.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here