ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்

0
400

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவது ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம். அரசு என்பது அரசன், அரச மரம் எனும் இரு பொருளை குறிக்கும். கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். இந்த இரண்டு சொற்களும் சிவன் என்னும் சொல்லுக்கு அடைமொழிகளாக இந்தத் தொடரில் இடம் பெறுகிறது. சிங்கம் காட்டிற்கு அரசன். சிவன் உலகத்திற்கே அரசன். தனி தனி சொற்களாக தோன்றி ஒரு தொடர் பொருளாகவும், அனைத்து பொருளும் அரசனைக் குறிக்கும் சிவனுக்குள் அடங்கும் கருப்பொருளாகவும் ஒளிந்திருப்பது இக்கோயிலின் சூட்சம ரகசியம். நாட்டை ஆளும் அரசனைக் கடவுளாக கருதும் மரபு நம்மிடம் இருந்தது. “திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே” என்று நம்மாழ்வார் அரசனை விஷ்ணுவாகப் பார்க்கிறார். அதேபோல சிவபெருமானையும் மாணிக்கவாசகர் “உத்தரகோச மங்கைக்கு அரசே” என்று அழைக்கிறார்.        அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசு எல்லா மரங்களுக்கும் தலைமையானது. அதுபோல் சிவன் எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமையானவர். திருமண சுப நிகழ்வின் போது அரசாணிக்கால் நடுவதும் அரசன் ஆணை முன்னர் – சிவன் ஆணை முன்னர் பெறுவதாகும். அரசு தல விருட்சமாகப் பல கோயில்களில் இடம் பெற்றிருப்பதை நாம் காண்கிறோம். அரச மரத்துக்கு போதி மரம் என்ற பெயரும் உண்டு. புத்தர் பிரான் ஞானம் பெற்றது போதி மரத்துக்கடியில் தான். எனவே அரச மரம் ஞானத்தின் சொருபம்.

சிங்கப்பூர் வடக்கு வாசலில் உட்லண்ட்ஸ் சாலையில் அரச மரத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட காவல் அரண் போல வீற்றிருக்கும் சிவ ஆலயம் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம். சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களில் தீர்த்தக் குளம் உள்ள ஒரே ஆலயம் என்ற பெருமை இக்கோயிலுக்கு மட்டுமே உள்ளது. மலேசியாவின் ஜோகூர்பாருவைச் சேர்ந்த பக்தர் திரு. கதிரேசன் என்பவர் இந்த ஆலயம் கட்ட 76,000 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் முயற்சியால் உருவான இந்தக் கோயில், 1995-ஆம் ஆண்டு, நாட்டின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழிவிடுவதற்காக, புதிய இடத்திற்கு அரசால் மாற்றப்பட்டது. 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலை, சுங்கை காடூட் எனும் தொழில் பேட்டை அருகே அறிமுகமில்லாத இடத்திற்கு இடம்பெயர்த்தனர். ஆனாலும், கோயிலின் சக்தியையும், மூலவராக வீற்றிருக்கும் அரச கேசரி சிவனையும் வழிபட வரும் மக்கள் கூட்டத்தின் அளவு இன்றளவும் குன்றியதில்லை. கோயிலின் அருகே 20,000 சதுர அடியில் அழகிய பூந்தோட்டமும் அமைக்கப்பட்டது. அமைதியான இயற்கை அழகு கொஞ்சும் சூழலில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அரச கேசரி சிவனை வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும் என்பது கோயிலின் ஐதீகம். மக்களின் அசைக்க முடியத நம்பிக்கை. சுற்றுலா பயணிகளுக்கான கார் பார்க்கிங் வசதிகள், தங்கும் விடுதிகள், குளியலறை மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இக்கோயிலை சுற்றி உள்ளன.

Address: Sri ArasaKesari Sivan Kovil,

25, Sungei kadut Av, Singapore 729679.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here