ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில்

0
512

சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் வாழும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில். இங்கு முருகனுடன், சிவன், விநாயகர், காளியம்மன் மற்றும் நவகிரகங்கள் வழிபாட்டுத் தெய்வங்களாக உள்ளன. 1960களில் செராங்கூன் சாலை மற்றும் தெற்கு பால சாலைகளில் பல இந்துக் கோயில்கள் குடியமர்ந்தன. ஜுராங் பகுதியில் சிறிய அளவிலான இந்து மத மக்கள் மட்டுமே வசித்து வந்ததால், அங்கு ஒரு இந்துக் கோயில் கூட அமையவில்லை. ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது தமிழர்களின் பழமொழி. அதனால், தங்களின் வழிபாட்டுக்கென்று தங்கள் பகுதியில் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் விருப்பமாக இருந்தது. பல ஆண்டு முயற்சிக்குப் பின் அந்தக் கனவு 1993-ஆம் ஆண்டு தான் நிறைவேறியது.

சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து 1993-ஆம் ஆண்டு கோயிலுக்கான நிலம் வாங்கப்பட்டு, சிறிய அளவிலான குடிலை 1994-ஆம் ஆண்டு அமைத்து வழிபட ஆரம்பித்தனர். தமிழர்களின் கடவுளான முருகப் பெருமானே ஆலயத்தின் மூலவராகவும் உருவானார். சாதாரண கோயில் கற்கோயிலாக மாற சற்று காலம் எடுத்துக் கொண்டது. ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால், 1998-ஆம் ஆண்டு தான் இப்போது உள்ள கோயில் கட்டப்பட்டது. ஆனால் அப்போதும் ஆலய கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. 2003-ஆம் ஆண்டு தான் அதன் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவுற்று, 2005-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பக்தர்களின் வழிபாட்டுக்காக கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து வந்த ஐயர் தான் ஆலய பூஜைகளை சிறப்பாக நடத்தி வருகிறார். மாதம் 5,000 பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு குறையாமல் வந்து முருகப் பெருமானை வழிபட்டு அவனது அருளை பெற்றுச் செல்கின்றனர். பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி என எடுத்தும் அரோகாரா என கோஷமிட்டு அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

Address: 281 Jurong East Street 21, Singapore 609605.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here