ஸ்ரீதர்ம முனீஸ்வரர் ஆலயம்

0
831

சிங்கப்பூரின் செராங்கூன் பகுதியில் உள்ளது ஸ்ரீதர்ம முனிஸ்வரர் கோயில். 1900-ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 30 இந்தியக் குடும்பங்கள் எளிய முறையில் தர்ம முனீஸ்வரனை வணங்கி வந்துள்ளார்கள். செம்பவாங் ரப்பர் தோட்டத்தைச் சேர்ந்த சமூக தலைவர்களான அமரர் பிச்சைப் பிள்ளை, அமரர் அழகப்பன் கோனார் ஆகியோர் முயற்சியால், அப்பகுதி வாழ் மக்களின் காவல் தெய்வமாக இந்தக் கோயில் எளிய முறையில் கட்டப்பட்டது. வளர்ந்த ஆலமரத்தினை வெட்ட முயன்றபோது ஏதோ ஒரு சக்தி வெட்ட முடியாது தடுத்து ஆட்கொண்ட காரணத்தால் தோல்வி அடைந்தனர். அப்போது அங்கு வாழ்ந்த குடியிருப்பாளர்கள் பலரும், இக்கோயிலைப் பராமரித்துக் கொண்டும், மாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த பால்கார சின்னையாவும், பால்கார பொன்னையா என்ற இரண்டு பால் வியபாரிகளும் முனீஸ்வரனின் நிழலுருவைக் கண்டதாகக் கூறியுள்ளனர். இப்படி ஒரு விந்தையான தல வரலாறு இந்தக் கோயிலுக்கு உள்ளது இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

1969-ஆம் ஆண்டு முதல் ஆலய விரிவு பணி தொடங்கி 1985 வரை நீடித்தது. இக்கால கட்டத்தில் விநாயகர், முருகன், நாகர், பைரவர் ஆகிய மூர்த்திகளுக்குத் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டன.  மூலவர் தரும முனீஸ்வரர் வடக்கு முகமாக ஆலயத்தின் தென்பகுதியில் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. முனீஸ்வரர் சன்னிதான விமானத்தின் எண்கோண வடிவமைப்பில் இருக்கிறது. ஓடுகளால் வேயப்பட்ட கூரையில் தங்க முலாம் பூசிய 36 திரிசூலம் உள்ளது. ராஜகோபுரத்தின் இரண்டாவது தள விமானத்தில் சுதையிலான சகல சிற்பங்களும், முனீஸ்வரர் சிற்பம், சிவபெருமானின் தனித்த சிற்பங்களும், மூன்றாவது கோபுரம் தளத்தில் மாரியம்மன், முருகன், விநாயகர், இராமர், சீதை, இலட்சுமணன், அனுமன், கங்காள மூர்த்தி, பைரவர் ஆகியசுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இங்கு 80 ஆண்டுகாலமாக இருக்கும் புனித மரமான அரச மரத்தின் கீழ் தென்புறம் தொன்றுதொட்டு வழிபட்டு வந்த நாகர் சன்னிதி நான்குகால் மண்டபமாக விமானத்துடன் அஷ்ட நாகங்கள் சிற்பமாகவும் அமைக்க பெற்றுள்ளது.

இவ்வாலயத்தில் முக்கிய விழாக்களாகச் சித்ராபெளர்ணமி, வைகாசி, விசாகம், ஆடிமாத பூஜை, ஆவணிமாத விழா,புரட்டாசி, நவராத்திரி விழா, ஐப்பசி மாத விழா, கார்த்திகை, மார்கழி மாத விழா, மாசிமகம், பங்குனிமாத விழாக்கள் போன்ற விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

Address: 57, Serangoon North Ave. 1Singapore 557 430.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here