ஸ்ரீகிருஷ்ண பகவான் கோயில்

0
376

சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையை ஒட்டி அமைந்துள்ள வாட்டர்லோ வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆலயம். 1870-ஆம் ஆண்டிலேயே இந்த ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் மத்திய வட்டாரப் பகுதியில் உள்ள பிராஸ் பசா சாலை(Bras Basha Road), விக்டோரியா சாலை, பிரின்செப் சாலை (Prinsep Road), குயின் சாலை, வாட்டர்லோ வீதி(Waterloo Street) ஆகியன உள்ளன. இங்கு வாழ்ந்த இந்தியர்கள் ஒன்று கூடி வழிபட வாட்டர்லோ வீதியை தேர்ந்தெடுத்து அங்கு ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஒரு ஆலயம் உருவாக்கி வழிபட்டு வந்தனர்.

இக்கோயிலை கட்ட முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்தியாவில் இருந்து வந்த திரு. அனுமான் பீம் சிங் என்பவர் தான். தாய் நாட்டு தெய்வ வழிபாட்டை மறக்காமல் இருந்த அவர், வாட்டர்லோ வீதியிலிருந்த தென்னை, வாழைத் தோட்டங்களை சுத்தம் செய்து ஒரு ஆலமரத்தின் கீழ், அனுமான், விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தார். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினார். அங்கு வாழும் ஊர் மக்கள் அனைவரும் இவருடன் இணைந்து அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தை உருவாக்க உதவினர். 1880-1904-ஆம் காலக்கட்டத்தில் இந்த கோயில் பீம் சிங்கின் மகன் உம்நா சோம்பா அவர்களின் நிர்வாகத்துக்கு வந்த பின்னர் தான் குடிசைக் கோயில் கல் கட்டிடமாக உருமாறியது. அதன் பின்னர் காலத்திற்கேற்ப பல மாறுதல்களை அடைந்து இன்று 137 ஆண்டு வரலாறு கொண்ட கிருஷ்ணன் கோயிலாக கண் கவரும் வண்ணங்களுடன் அழகிய கோயிலாக உருவாகி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

கோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில், நாட்டியம், தற்காப்புக் கலைகள், நுண்கலை சம்பந்தமான வகுப்புகள் போன்ற பாரம்பரிய கலைகளை வளர்க்கும் பல வகுப்புகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆறு கால பூஜைகளும் கோயிலில் ஆகம விதிப்படி நடந்து வருகிறது. தமிழ் புத்தாண்டு விழா, வசந்த நவராத்திரி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, சங்கு அபிஷேகம், வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல சிறப்பு விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. மேலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை நிதிகளும் வழங்கப்படுகின்றன.

Address: 152 Waterloo St., Singapore 187961

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here