ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் கோவில்

0
399

சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடுடைய திரு. பொன்னம்பல சுவாமிகள் இந்திய தேசிய படை சார்பில் சிங்கப்பூர்க்கு பணியாற்ற வந்தார். விநாயகர் மீது அளவுக் கடந்த பக்தி கொண்ட அவர், தன்னுடன் விநாயகரையும் துணையாகக் கொண்டு வந்தார். வணங்குவதை மறவாது தினமும் விநாயகரை வழிபட்டு வந்தார். பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பும் போது தனக்கு துணையாக இருந்த விநாயகரை சிங்கப்பூரிலே விட்டுச் செல்ல எண்ணினார். ஆகையால் இங்குள்ள நகரத்தாரிடம் விநாயகரை ஒப்படைத்து நாடு திரும்பினார். நகரத்தாரும் ஒரு சிறு குடில் அமைத்து விநாயகரை அங்கு வைத்து பூஜைகளும், வழிபாடுகளும் செய்யத் தொடங்கினர். திரு சன்னியாசி என்பார் பூஜைகளுக்கும் வழிபாடுகளுக்கும் பொறுப்பாக இருந்து கவனித்து வந்தார். 1925-ஆம் ஆண்டில் இந்த விநாயகர் அமர்ந்தவிடம் இப்போதும் இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகம். அருகில் சிங்கப்பூர் மத்திய சிறைச்சாலை. கோவிலுக்கு செல்ல ஒரு சிறு ஒற்றையடி பாதையும் அமைக்கப் பெற்றது. முதலாம் உலக யுத்தம்முடிந்த பிறகு பொது மருத்துவமனையில் பணிபுரிந்தவர்களும், மத்திய சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களும் இந்த கோயில் விநாயகரை வழிபட்டு சென்றனர். காலப்போக்கில் கணிசமான அளவில் மக்கள் விநாயகரை நாடி வந்து வழிபட்டனர். காலப் போக்கில் விநாயகருடன் நாகரும் வந்து சேர்ந்தார். பொறுப்பு வகித்து வந்த சன்னியாசி தமிழகம் செல்ல வேண்டிய சூழ்நிலை அமையவே, நகரத்தாரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டார். நகரத்தார் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தை நாடினர். இதில் இந்து அறக்கட்டளை வாரியம் ஆர்வம் காட்டவில்லை. ஆகையால் நகரத்தாரே பொறுப்பினை ஏற்று ஒரு புரோகிதரை நியமித்து கோவிலை நடத்தினர். பின்னர் கோவில் அமைந்திருந்த இடம் அரசு பொது மருத்துவமனைக்குரியது என்றும், மருத்துவமனை விரிவாக்கத்திற்கு இடம் தேவைப்பட்டதால் 1970-ஆம் ஆண்டு அரசாங்கம் அந்த இடத்தை கையகப்படுத்தி நிலத்திற்குரிய தொகையை கொடுத்தது. தற்போத் அமைந்திருக்கும் இடத்தில் அரசு கொடுத்த தொகையில் புதிய ஆலயம் உருவானது. பழைய விநாயகருக்கு பதில் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய கருங்கல் விநாயகரை ஆகம விதிப்படி ஸ்தாபனம் செய்து மூலவராக வைத்தனர். பொன்னம்பலம் கொடுத்த விநாயகரை மூல விக்கிரகத்திற்கு எதிரில் வைத்தனர். முருகனுக்குரிய வேல் ஒன்றினையும் புதியதாக வைத்தனர். லாயின் சிட்டி விநாயகர் கோவில் என்று புதிய கோவிலுக்கு பெயரிட்டார்கள். ஆரம்பக் காலத்தில் இக்கோயில் இந்திய தேசிய ராணுவத்தினர் குடியிருந்தப் பகுதியில் அமைந்திருந்தது. இந்திய சிப்பாய்கள் இருந்த பகுதியைக் கடந்துதான் கோவில் செல்லவேண்டும். கோவிலைக் குறிக்க சிப்பாய் லையின் கோயில் என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் சிப்பாய் மறைந்து “லாயின் சிட்டி விநாயகர் கோயில்” என்ற பெயர் காரணப் பெயராக அமைந்துவிட்டது. டேங் ரோடு தண்டாயுதபாணி கோவில் நகரத்தார் நிர்வாகத்தின் கீழ் இருந்தக் காரணத்தால் லாயின் சிட்டி விநாயகர் கோவிலும் அவர்கள் நிர்வாகத்தின் பார்வையில் இருக்கிறது. தைப்பூசத்திற்கு முதல் நாள் வெள்ளி இரதம் டேங் ரோடு தண்டாயுதபணி கோவிலிலிருந்து புறப்பட்டு லாயின் சிட்டி விநாயகர் கோவில் வரை வந்து திரும்பி செல்வது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். 1973,1989-ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. லாயின் சிட்டி விநாயகர் கோவில் சிறிதாக இருப்பதால் கோவிலின் உட்புறமாக 108 முறை வலம் வந்து வேண்டினால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது இங்குள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. முக்கிய விழாக்களாக விநாயகர் சதுர்த்தி, வேல் அபிஷேகம், புத்தாண்டு, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற விழாக்களின் போது சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

Address: 73 Keong Saik Rd, Singapore 089167

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here