ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் (காமன்வெல்த்)

0
562

ஸ்ட்ரெயிட்ஸ் செட்டல்மென்டின் (Straits Settlement) ஒரு பகுதியான சிங்கப்பூரில் 1928 – ஆம் ஆண்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. முதல் இரயில் 1932-ல் ஓடத் தொடங்கியது. தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு மலேசிய ரயில்வே ஊழியருடையதாகும். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இவர்கள் யாவரும் குயின்ஸ் டவுனில் (Queens Town) வசித்து வந்தார்கள். பண்டைக்காலத்தில் இருந்து தமிழர்கள் எங்கு குடியேறினாலும் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதேனும் ஒரு வடிவத்திலோ உருவத்திலோ கோயில் ஒன்றை நிறுவி வழிபடுவது வழக்கம். அதற்கு இங்கு வசித்த தமிழர்களும் விதிவிலக்கல்ல. சூலம் ஒன்றையும், கல் ஒன்றையும் நிறுவி சிறு கூரையுடன் கூடிய குடில் ஒன்றினை அமைப்பார்கள். இந்த கூரை குடிலையே கோயிலாக எண்ணிவழிபடுவார்கள். அப்படி உருவானது தான் ஸ்ரீ முனீஸ்வரர் கோயில். 1961 –ஆம் ஆண்டில் குயின்ஸ்வே டவுனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் தொடக்கக் குடியேறிகளில் ஒருவரான திரு.எ ன்.வீ. மேனன் இந்த குடிலை முறையான கோயிலாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட முனைந்தார். முனீஸ்வரன் கோயில் அதிகாரப்பூர்வமாக 1967-ல் மார்ச் முதல் தேதி பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் 1969-ஆம் ஆண்டு எளிய முறையில் கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டு முனீஸ்வரர், விநாயகர், மாரியம்மன், முருகன் ஆகிய சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.

முனீஸ்வரர் கோயிலும் மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த காரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர்கோயில், மற்ற கோயிலுடன் இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. நான்கு கோயில்களுடன் சேர்ந்து அமைப்பதற்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் மாற்று இடம் வழங்கியது. இணைய பரிந்துரைக்கப்பட்ட கோயில்:-1. சிலாட் சாலையிலுள்ள வேல் முருகன் கோயில். 2. ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்மன் கோயில். 3. கான்பரா சாலையிலுள்ள புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயில். 4. புக்கிட் தீமா அவென்யூவிலுள்ள இராம பக்த அனுமான் கோயில் ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்மன் கோயிலைத் தவிர ஏனைய கோயில்கள் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை. புலோ புக்கம் தீவிலிருந்த விநாயகர் கோவில், எண்டர்சன் சாலையிலிருந்த சித்தி விநாயகர் கோவில், முனீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் ’’முனீஸ்வரன் கோயில்’’என்ற பெயரில் ஒரு குடை கீழ் இணைந்தன. இறுதியில் 3, காமன்வெல்த் டிரைவில்(Commonwealth drive) 2500 சதுர மீட்டர் நிலத்தில் முனீஸ்வரன் கோயில் இயங்க வீடமைப்பு கழகம் அனுமதி அளித்தது.

1994-ஆம் ஆண்டு ஐந்து அடுக்கு கொண்ட ராஜகோபுரத்துடன், பிரதான கோயில் வழிபாட்டு சன்னிதிகளுடன் பன்னோக்கு திருமண மண்டபம், விசேஷ நடவடிக்கைகளுக்குத் தனி அறை எனச் சிறப்பான முறையில் ஆலயம் அமைந்தது. முனீஸ்வரர் சன்னிதி தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் சிறப்பானது. இந்தியாவின் தலை சிறந்த கட்டட கலைஞர்கள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது. முனீஸ்வர பெருமானை வழிபடும் போது பக்தர்களின் பார்வையை தூண்கள் மறைக்காதிருப்பது தனிச்சிறப்பு. வேறெங்கிலும் உள்ள சன்னிதிகளில் அரிதாகக் காணக்கூடிய கட்டட அமைப்பின் சிறப்பை முனீஸ்வரர் சன்னதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Address: 3, Commonwealth Drive, Singapore  109670.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here