வாசகன் : மலையரசி

0
259

27 சூன் 1948
ஞாயிறு

இன்று விருப்பமில்லாமல்தான், பெண் பார்க்கச்சென்றேன். ஆனால், அங்குதான் அந்த அதிசயம் நடந்தது. வாசலில் பூதட்டுடன் பாவாடை தாவாணியில், வரவேற்றவளைப் பார்த்த மறுகணமே, கற்பனையில் உலவும் உன்னவள்! அதோ! என்று பூக்களின் நறுமணம் தூது அனுப்பியது. நெஞ்சில் நிறைந்தவளைக் கண்ட களிப்பில் துள்ளினேன். “உனக்கென்ன புத்திக்கெட்டு விட்டதா?பார்க்க வந்தவளை விட்டுவிட்டு”என்று கடுகடுக்கும் அப்பாவின் முகத்தை, நிமிர்ந்து பார்க்கவில்லை. பாரதியின் கண்ணம்மாவும், புதுமைப்பித்தனின் செல்லம்மாவும் மன ஊஞ்சலில் ஆடுவது, அவருக்கு எப்படி தெரியும்? படிப்பு,வேலை, நான்கு இளைய சகோதரர்கள், சாதி வித்தியாசம், அவர் கொடுத்திருக்கும் வாக்கென்று எதுவும், என்னைக் கட்டுப்படுத்தப்போவதில்லை. இதோ….சின்னதாக ஒளி கொடுத்துக்கொண்டிருக்கும், இந்த மெழுகுவர்த்தியின் மீது உறுதி. கனவு மெய்ப்பட வேண்டும்! அம்மா அரற்றிக்கொண்டிருக்கிறார். பிரச்சனைகள் ஆரம்பம்.

0057

25 சூலை 1952
வெள்ளிக்கிழமை

“அதிகம் படித்த அந்த அக்காவை ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை?” வாழ்வின் ஒரு பொன்நாள்! பால் ஏந்திய கைகள்! அவள் கேட்ட முதல் கேள்வி? நெருஞ்சி முள் மீது நிற்கும்
உணர்வை வெளிக் காட்டிக்கொள்ளாமல், நான் ரசித்தவைகளை கொட்டிக் கொண்டிருந்தேன். “போதும்….நிறுத்துங்க எனக்கு ஒன்னும் புரியல!” என்னுள் மறைந்திருந்த கர்வம் கைத்தட்டியது,
எழுத்துக்களெல்லாம் நகைத்தன. “மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறாள்!” தெரிந்துதானே மணந்து கொண்டேன். அவளுக்கு தினம் படித்துக் காட்டினேன். “அய்யோ…என்னாங்க இது? ஒன்னும் புரியல!” “இந்த புத்தகக்-குப்பைகளை எடைக்கு போட்டால்?……சில்லறை கிடைக்குமே!”அவளின் அறியாமையில் தொலைந்து விடுவதைவிட, எனக்குள் அவளைத்தேட ஆரம்பித்தேன். இப்பொதெல்லாம் அலமாரியில் புத்தகங்களை ஒழுங்குப்படுத்துவது அவள்தான்

படித்தவை மனத்தையும், மென்மையாக்குகிறது என்பதை இப்பொழுது உணர்கிறேன். அவளின் முனகல் கேட்கின்றது. மற்றவை பிறகு. 0009

25 ஏப்ரல் 1955
சனிக்கிழமை

“இந்தாங்க இதை படிங்க!” புத்தகத்தை நீட்டினாள். எழுத்துக்களெல்லாம் நடனமாடின. இரண்டு பக்கங்களைப் புரட்டியதும் அவளைப் பார்த்தேன். கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொருநாளும் உதயம் இவளுக்குக்காக காத்திருக்கும். வீட்டு வேலைகளோடு, அம்மாவின் இம்சைகளையும், வசைமொழிகளையும் கடக்கும், அவளின் நெற்றியை வாஞ்சையுடன் வருடினேன்.
’மாசறு பொன்னே வலம்புரி முத்தே….’
அமைதியாக விடைபெறுகிறேன். 11.16

டிசம்பர் 13 1957
வெள்ளிக்கிழமை

அவள் கைகளை ’குறிஞ்சி மலர்’ தழுவிக்கொண்டிருந்தது. பார்வையால் அவளை வாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் நீண்டநேரம் விழித்திருந்தால் உடம்புக்கு நல்லதல்லயென்று மெழுகுவர்த்தியை…இல்லை இல்லை…..எரியும் மின்விளக்கை அணைத்து விடுகிறேன்.
காதலி!….மனைவி!….இப்போது என் ஆருயிர் தோழி அவள்!
மூச்…. 8.58

“அரவிந்தா!!!…..அப்பாவோட புத்தகங்களையெல்லாம் தூக்கி வெளியே வைச்சுட்ட, இங்கிருந்த அவரோட டைரி எங்கடா?” பதற்றத்துடன் அலமாரியில் துருவிதுருவி தேடினாள். ’ஹாரி பாட்டர்’ வரிசை அவளை மிரட்டியது. மேசைமீது புன்னகைக்கும் தன் கணவரின் படத்தை நகர்த்திவிட்டு, தேடினாள். “ம்ம்…..இங்கேதானே இருந்தது!” பரிதவிக்கும் இதயத்துடன் துழாவிக்கொண்டிருந்தாள்.

அரவிந்தன் எட்டிப்பார்த்துவிட்டு, “பெரிய இட்லர் டைரி!” முகத்தைச் சுளித்துக் கொண்டே நகர்ந்தான். “அவரோட டைரி எங்கே…..???” அவளின் அழுகுரல் எங்கோ நினைவுகளை விழுங்கிக்
கொண்டிருக்கும் ’மறுசுழற்சி’ இயந்திரத்திற்கு மட்டும் கேட்டு இருந்தால்? அறையெங்கும் பரவி கிடக்கும் வெளிச்சத்தில் பிப்ரவரி 2 2019 ஞாயிறு மங்கலாகத் தெரிந்தது.(300)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here