வைராவிமட காளியம்மன் கோயில்

0
522

தமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு வந்தனர். சிங்கப்பூரின் வைராவிமட காளியம்மன் கோயில் வைராவிமட இடத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள், பால ரூபினி என்ற பொருள்கள் உள்ளன. கருமையான நிறத்துடன் மிகுந்த கோர உருவத்துடன் உடையவள் காளி என பண்டைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோர வடிவே ஆனாலும், தம்மை நாடி வரும் பக்தர்களின் துயர் துடைக்க ஓடி வரும் கருணை உள்ளம் கொண்டவள் காளி என்றே பக்தர்கள் பயத்தை தாண்டிய பக்தியை அவளிடத்தில் செலுத்துகின்றனர். வைராவிமட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை கடந்த ஆலயமாகும். சிங்கப்பூரில் பழைமை வாய்ந்த ஆலயங்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த கோயில் கினினி சாலையில் ஆரம்ப காலத்தில் உருவானது. இந்த இடம் மலாயன் ரயில் எனும் மலாயாவுக்குச் சொந்தமான நிலம். அந்தக் காலக்கட்டத்தில் ரயில் மூலம் மலாயா செல்லும் சிங்கப்பூர் மக்களுக்கு வழித்தடமாக செயல்பட்டது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சாலை போடும் பணி, ரயில் தடம் அமைக்கும் பணி, தோட்ட வேலைகள் போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் அதிகம் ஈடுபட்டவர்கள் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த தமிழர்கள் தான். தாங்கள் வணங்கி வழிபட ஒரு கோயில் வேண்டுமென்று எண்ணி உருவாக்கிய சிறு குடில் ஆலயம் தான் இந்த வைராவிமட காளியம்மன் கோயில். காலப்போக்கில் ரயில் தடம் விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் தேவை பட்டதால் இந்த கோயில் இடமாற்றம் பெற்றது. ஆர்ச்சர்ட் சாலையில் இந்த கோயில் அமைக்கப்பட்ட சிறு காலத்திற்குள் நகர மேம்பாட்டுக்காக மீண்டும் அரசங்காங்கத்தால் மாற்று இடம் வழங்கப்பட்டது. பின்னர் சோமர்சட் சாலையில் இந்த கோயில் 1921-ஆம் ஆண்டு தனது கட்டுமான பணிகளை தொடங்கி சிறு கல் கோயிலாக வழிபாட்டுக்கு வந்தது. பின்னர் 1933-ஆம் ஆண்டு இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கத் தொடங்கி புதிய கோயிலாக உருமாறி அதே ஆண்டு குடமுழுக்கு விழாவும் நடந்தது. பல காலம் சோமர்சட் சாலையில் அருள்பாலித்து வந்த காளியம்மன் கோயிலுக்கு மீண்டும் 1970ல் சிக்கல் ஏற்பட்டது. நகர சீரமைப்பு, விரிவாக்கத்திற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துக் கொண்டு குடிமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தோ பா யோ, குடியேற்ற பகுதியின் நடுவே 8854 சதுர அடியில் வைராவிமட காளியம்மன் கோயில் உருவாகி தற்போது வரையில் அதே இடத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறாள். மார்ச் மாதம் 27, 1986-ஆம் ஆண்டு கோலாகலமாக குடமுழுக்கு நன்னீராட்டு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.திரளான மக்கள் அதில் பங்கேற்றனர்.

இவ்வாலயத்தில் மூலவராக அன்னை வைராவிமட காளியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள். அவளைத் தொடர்ந்து விநாயகர், முருகன், வள்ளியம்மாள், துர்கை, அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன், பெரியாச்சி, மதுரைவீரன், கல்யாண சுந்தரேஸ்வரர், நவகிரகங்கள் என பல தெய்வங்களும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். குருவாயூர் ஐயப்பன் சன்னதியில் ‘துலாபாரம்’ அமைந்துள்ளது. சிங்கப்பூரில் ‘துலாபாரம்’ அமைந்துள்ள ஒரே திருத்தலம் என்றால் அது வைராவிமட காளியம்மன் கோயில்தான். மேலும், இங்கு சரஸ்வதி பாலர் பள்ளியும் முழு நேரமாக நடைபெறுகிறது. பொது நோக்கில் இலவச சட்ட ஆலோசனை சேவையும், சமூக சேவையும் வழங்கப்படுகிறது. முக்கிய விழாவாக சித்ரா பெளர்ணமி, பிரம்ம உற்சவம், சந்தன குட அபிஷேகம், பெரியாச்சி பூஜை, மகர விளக்கு, அங்காள பரமேஸ்வரி பெளர்ணமி பூஜை போன்றவை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

Address: 2001 Toa Payoh Lor 8 Singapore 319259,

http://svkt.org.sg/

வடகிழக்கு இரயில் தடத்தில் அமைந்துள்ள போடோங் பசீர் இரயில் நிலையத்தில் இருந்து, 142 பேருந்தின் மூலம் 4 நிறுத்தங்கள் கழித்து பிளாக் 120 நிறுத்தத்தில் இறங்கினால் 750 மீட்டர் நடக்கும்  தொலைவில் இந்த கோவில் உள்ளது. மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here